வள்ளலார் பெருவெளி: சட்டமன்றத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாகப் பேசினாரா அமைச்சர் ரமேஷ்? முழு விளக்கம் தேவை
வடலூர் வள்ளலார் பெருவெளி தொடர்பான 30.07.2026 சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு என்ன சொல்கிறது? பெருவெளியில் கட்டுமானம், 71.26 ஏக்கர் சுற்றுச்சுவர், Site-A, Site-B மற்றும் அரசின் மாற்றியமைக்கப்பட்ட திட்டம் குறித்து எழுந்துள்ள கேள்விகளை அலசும் தமிழ் ஊடகம் சிறப்புக் கட்டுரை.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
வள்ளலார் பெருவெளி : அறநிலையத்துறை அமைச்சருக்கு
அழுத்தம் கொடுக்கிறார்களா சேகர்பாபு தரப்பினர் !?
அமைச்சர் ரமேஷ் முழுமையான தகவலை சட்டமன்றத்தில் தெரிவித்தாரா ?
வடலூர் பெருவெளித் தலம் குறித்து சன்மார்க்க சங்கத்தவர்கள் என்கிற முகமூடியில் தொடர்ந்து பொய்யான தகவல்களை சிலர் பரப்பிக்கொண்டிருப்பதாக வருத்தம் கொள்கிறார்கள் வள்ளலார் சன்மார்க்க ஆய்வாளர்களும், பின்பற்றாளர்களும்.
இவர்களின் நோக்கம் பெருவெளியை சிதைத்து அங்கே வணிக நோக்கத்துடன் கட்டுமானங்கள் கட்டி அந்த ஒட்டுமொத்த அமைப்பையும் தனியார் வசம் அதாவது தங்கள் வசம் எடுத்துக்கொண்டு சன்மார்க்கத்தை முழுமையாக வியாபாரப் பொருளாக்கிவிட வேண்டும் என்பதே என்கிறார்கள் அவர்கள்.
இந்தக் சூழ்ச்சியை எதிர்த்து உத்தர ஞான சிதம்பர சேவை இயக்கம் , வள்ளலார் பத்தர்கள், உண்மையான சன்மார்க்க சங்கத்தினர், வள்ளலார் பின்பற்றாளர்கள், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியினர், ஆன்மிக அமைப்பினர், வடலூர் பார்வதிபுரம் மக்கள் ஆகியோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மனுதாரர் வினோத் ராகவேந்திரா, வழக்கறிஞர் சுரேஷ், வள்ளலார் பணியகத்தினர் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில், கடந்த 30/07/26 அன்று இந்த வழக்கில்சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய வரிகளை அப்படியே நீதிபதிகளின் ஆங்கில வரிகளை தமிழ் படுத்திக் கொடுத்துள்ளோம்.
"நீதிபதிகள்:
டாக்டர் ஜி. ஜெயச்சந்திரன், நீதிபதி
எஸ். சௌந்தர், நீதிபதி
தேதி: 30.07.2026
G.O.Ms.No.231-ன் கீழ் அரசால் முன்மொழியப்பட்ட திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மேலும்,
பெருவெளிப் பகுதியில் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளப்படாத வகையில் திட்டம் மாற்றியமைக்கப்படும்.
பெருவெளியின் நடுப்பகுதியில் இந்தச் சாலைகளைக் கட்டுவதற்கு ரிட் மனுதாரர்களும் மற்ற பக்தர்களும் மிகக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்ததால், அந்தத் திட்டத்தைக் கைவிட அரசு தற்போது கொள்கை முடிவு எடுத்துள்ளது.
அந்தச் சாலைகளைப் பெருவெளியின் சுற்றுப்புற எல்லைப் பகுதியில் (periphery of Peruveli) அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, மாற்று இடத்திலும் Site-B பகுதியிலும் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்வதற்கான பார்வையை மறைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டம் அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு:
“எந்த நிலையிலும் 71.26 ஏக்கர் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணி உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.”
என்பதே நீதிமன்ற உத்தரவு.
ஆனால், சட்டப்பேரவையில் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிடுவதாக" அரசு கூறவில்லை என்று கூறியுள்ளது தவறான தகவல்.
எனவே, அமைச்சர் அவர்கள் இது குறித்து விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.
01. பெருவெளியின் "சுற்றுப்புறம்" என்பது 106 ஏக்கர் தவிர்த்த வேறு இடமாகத்தான் இருக்கவேண்டும்.
02. 72 ஏக்கர் தவிர ஆக்கிரமிப்பில் உள்ள 34 ஏக்கர் சேர்த்து 106 ஏக்கரில் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது.
03. நீதிமன்ற உத்தரவுப்படி தற்போதுள்ள 72 ஏக்கருக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும்.
04. "வடலூர் தலைமைச் சங்கம்" எனும் பெயரில் உள்ள அமைப்பு உண்மையான அமைப்பு அல்ல. அது வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்தவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு அல்ல. அது திமுக பினாமி அமைப்பு. எனவே அதை புறக்கணிக்க வேண்டும்.
அரசின் மாற்றியமைக்கப்படும் திட்டம் குறித்து ஆராய, உண்மையான வள்ளலார் சன்மார்க்க சங்கத்தவர்கள், உத்தர ஞான சிதம்பர சேவை இயக்கம் , வள்ளலார் பணியகம், தெய்வத்தமிழ் பேரவை, சன்மார்க்க ஆய்வாளர்கள் மற்றும் இந்த அமைப்பினரின் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தபட வேண்டும் என்பதே பெருவெளி காக்கும், வள்ளலாரின் சன்மார்க்கம் காக்கும் அமைப்புகளின், ஆளுமைகளின் கோரிக்கை.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)