தேவரடியார் என்பவர்கள் தேவதாசிகள் அல்லர்! சோழர் கல்வெட்டுகள் சொல்லும் உண்மை
தேவரடியார் என்பவர்கள் தேவதாசிகளா? சோழர் காலக் கல்வெட்டுகளில் தேவரடியார் யார்? திருமணம், இறைச்சேவை, தானம், கோயில் உரிமைகள் குறித்த சான்றுகளையும் பிற்கால பொட்டுக்கட்டு–தேவதாசி மரபையும் தனித்தனியாக ஆராயும் வரலாற்றுக் கட்டுரை.
தேவர் அடியார் வேறு; பொட்டுக்கட்டி–தேவதாசி மரபு வேறு
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
“தேவர் அடியார் என்பவர்கள் நீங்கள் கேட்கும் ‘தே....யா’ எனும் கொச்சைச் சொல்லுக்கு உரியவர்கள் அல்லர். தமிழர் கோயில்களில் தேவர் அடியார் என்பவர்கள் யார் என்பது குறித்துத் தெளிவான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.”
தமிழக வரலாற்றைப் பேசும்போது வெவ்வேறு காலங்களில் இருந்த வெவ்வேறு சமூக அமைப்புகளை ஒரே பெயருக்குள் அடக்கிப் புரிந்துகொள்வது வரலாற்றுப் பிழைகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் தேவரடியார், தேவனார் மகள், தளியிலார், பதியிலார், தளிச்சேரிப் பெண்டுகள் போன்ற அடையாளங்களைக் கொண்ட கோயில் சார்ந்த பெண்களை, அவர்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் காணப்படும் பொட்டுக்கட்டுதல்–தேவதாசி முறையில் பாதிக்கப்பட்ட பெண்களோடு ஒப்பிடக்கூடாது.
இரண்டையும் தனித்தனியாகப் பார்க்கவேண்டும். காரணம் இரண்டுமே ஒன்றல்ல.
I. தமிழர் கோயில்களின் தேவர் அடியார்
1. “தேவரடியார்” என்பதற்கு கல்வெட்டியல் தரும் பொருள்
தமிழ்நாடு தொல்லியல் துறையின் கல்வெட்டுச் சொல்லகராதி “தேவரடியார்” என்பதற்கு நேரடியாக “கோயிலில் பணிபுரியும் பெண்டிர்” என்று பொருள் தருகிறது. அதே சொல் சில இடங்களில் சைவ அடியார்/துறவியரையும் குறிக்கிறது.
இதுவே முதலில் கவனிக்கப்பட வேண்டிய அடிப்படைச் சான்று.
“தேவரடியார்” என்ற கல்வெட்டுச் சொல்லுக்கு “பாலியல் தொழிலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பெண்” என்று தமிழ்நாடு தொல்லியல் துறையின் கல்வெட்டுச் சொல்லகராதி பொருள் தரவில்லை, அப்படி ஒரு நடைமுறை தமிழர் வரலாற்றில் இருக்கவுமில்லை.
2. சோழர் காலத்தில் ஒரே பெயர் அல்ல
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பதிவின்படி கோயில் சார்ந்த பெண்கள் பல இடங்களில்,
"நக்கன், மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலார், தேவரடியார், கூத்திகள், கணிகையார், அடிகள்மார்" போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எனவே சோழர் காலக் கோயில் பெண்கள் அனைவரையும் ஒரே தொழில், ஒரே சமூக நிலை கொண்டவர்களாகக் கருதுவதற்கே முதலில் இடமில்லை.
3. தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்கள்
முதலாம் இராஜராஜ சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சுமார் 400 தளிச்சேரிப் பெண்களை நியமித்து, அவர்களுக்கு கோயிலுக்கு அருகில் குடியிருப்புகளையும் ஏற்படுத்தியதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
அவர்கள் சோழ நாட்டின் பல கோயில்களிலிருந்து அழைத்துவரப்பட்ட கோயில் பணியாளர்கள்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது: இது அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட கோயில் நிர்வாகப் பணியாளர் அமைப்பு குறித்த கல்வெட்டுச் செய்தி.
4. தேவரடியார் திருமணமான பெண்ணாகவும் இருந்திருக்கிறார்
கி.பி. 1049ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவொற்றியூர் கல்வெட்டில் சதுரன் சதுரி என்ற தேவரடியாள், நாகன் பெருங்காடான் என்பவரின் “அகமுடையாள்” — மனைவி என்று குறிப்பிடப்படுகிறார்.
Leslie C. Orr ஆய்விலும் சோழர் காலக் கல்வெட்டுகளில் "tevaratiyal", "tevanar makal" உள்ளிட்ட கோயில் பெண்கள் சிலர் ஆண்களின் மனைவிகளாகப் பதிவாகியிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் பொருள் முக்கியமானது:
தேவரடியார் என்ற அடையாளமும் மனித ஆணுடன் திருமணமான பெண் என்ற அடையாளமும் சோழர் காலத்தில் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருக்கவில்லை.
5. கோயிலுக்குத் தானம் செய்த தேவரடியார்கள்
சோழர் காலக் கல்வெட்டுகளில் தேவரடியார்கள் வெறும் உதவி பெறுபவர்களாக மட்டும் வரவில்லை. அவர்கள் தானம் வழங்குபவர்களாகவும் வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் நன்னிலம் கல்வெட்டுகள் தொகுப்பில், மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் பெரியநாச்சி என்ற தேவரடியாளுக்குக் காணியாக நிலம் வழங்கப்பட்ட செய்தியும், அவரது குடும்ப உறவுகளும் பதிவாகியுள்ளன.
Leslie Orr ஆய்வு, சோழர் காலக் கோயில் பெண்களின் பொருளாதாரத் தன்னாட்சி மற்றும் அவர்கள் கோயில்களுக்கு அளித்த தானங்கள் அவர்களுக்கு சமூக–சமயச் செல்வாக்கைக் கொடுத்ததை விரிவாக ஆராய்கிறது.
6. தேவரடியார் என்றால் “நடனப்பெண்” மட்டுமல்ல
இதிலும் மிக முக்கியமான புள்ளிவிவரம் ஒன்று உள்ளது.
Leslie Orr ஆய்வு செய்த தேவர்/கோயில் பெண்களைக் குறிப்பிடும் 304 சோழர் காலக் கல்வெட்டுகளில் நான்கு கல்வெட்டுகள் மட்டுமே அவர்களை நடனத்தைக் குறிக்கும் சொல்லால் அடையாளப்படுத்துவதாக அவரது நூலின் கல்வியியல் மதிப்புரை குறிப்பிடுகிறது.
இதனால்,
தேவரடியார் = ஆடல் பெண்
என்ற ஒற்றைச் சமன்பாடு கல்வெட்டுச் சான்றுகளால் நிலைபெறவில்லை.
கோயில் சார்ந்த பெண்களின் செயல்பாடுகளில் தானம், விளக்கெரிக்க நிதி, கோயில் சேவை, சடங்கு சார்ந்த பணிகள், சிலருக்கு இசை/ஆடல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் இருந்திருக்கின்றன.
7. அவர்களுக்குச் சிறப்பு உரிமைகளும் இருந்தன
பிற்காலச் சோழர் காலத்தில் கோயிலுக்குத் தானம் வழங்கிய பெண்களுக்கு ஊர்வலத்தில் இறைவனுக்கு அருகில் இடம்பெறுதல், குறிப்பிட்ட இறைப்பாடலைப் பாடும் உரிமை போன்ற கோயில் மரியாதைகளும் உரிமைகளும் கிடைத்ததாக Orr ஆய்வைச் சுருக்கும் அரசுப் பதிப்பு குறிப்பிடுகிறது.
அதாவது அவர்கள் வெறுமனே பயன்படுத்தப்பட்ட பெண்கள் என்கிற பொய்யான பிம்பத்தைக் கல்வெட்டுச் சான்றுகள் மறுக்கின்றன.
8. மிக முக்கியமான வேறுபாடு — “கடவுளுக்குத் திருமணம்”
சோழர் காலக் கோயில் பெண்களுக்கும் 20ஆம் நூற்றாண்டில் அறியப்பட்ட தேவதாசி முறைக்கும் அடிப்படையான வேறுபாடு இருப்பதாக Leslie Orr குறிப்பிடுகிறார்.
சோழர் காலக் கோயில் பெண்கள் கடவுளைத் திருமணம் செய்துகொள்ளும் வகையிலான dedication/marriage ceremony ஒன்றுக்கு உட்பட்டதற்குச் சான்றில்லை என்று அவர் கூறுகிறார்.
மேலும், அத்தகைய சடங்கிற்கு விஜயநகரக் காலத்தில்கூட தனக்குச் சான்று கிடைக்கவில்லை என்கிறார்.
அவர் கண்ட முதல் சான்று 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுசீந்திரம் கோயில் ஓலைச்சுவடி. அதில்தான் கோயில் பெண்ணைத் தெய்வத்துடன் திருமண உறவில் இணைக்கும் அர்ப்பணிப்புச் சடங்கு குறிப்பிடப்படுகிறது.
17 ம் நூற்றாண்டு என்பதை நினைவில் வைப்போம்.
II. பொட்டுக்கட்டுதல் – தேவதாசி மரபு
இப்போது இதனை மேற்கண்ட சோழர் காலத் தேவரடியார் பதிவுகளுடன் கலக்காமல் தனியாகப் பார்ப்போம்.
1. “தேவதாசி” என்பது தமிழ்ச் சொல் அல்ல
தேவதாசி — Devadāsi என்பது சமஸ்கிருதச் சொல்லமைப்பு:
Deva + Dāsi.
தமிழ்க் கல்வெட்டுகளின் தேவர் + அடியார் என்ற சொல்லமைப்பிலிருந்து இது மொழியியல் ரீதியாக வேறானது.
ஆனால் வெறும் சொற்பொருள் ஒற்றுமையைக் கொண்டு இரண்டு சமூக அமைப்புகளும் ஒன்றுதான் என்று முடிவு செய்யக் கூடாது.
2. தெலுங்கு மொழிப் பகுதிகளில் தனித்த மரபுகள்
இன்றைய ஆந்திர–தெலுங்கு பகுதிகளில் மரபுவழிப் பெண் இசை–நடனக் கலைஞர்கள் "கலாவந்துலு" - Kalavantulu என்று அறியப்பட்டனர். Oxford Handbook of Indian Dance-ன் சமீபத்திய ஆய்வு அவர்களைத் தெலுங்கு மொழிப் பகுதிகளின் "பாரம்பரிய பெண் பாடகர்கள் - ஆடல் கலைஞர்கள்" அதாவது hereditary women singer-dancers என்று குறிப்பிடுகிறது; அவர்கள் பிற்காலத்தில் பொதுவாக தேவதாசிகள் - “Devadasis” என்று அழைக்கப்பட்டதையும் சுட்டுகிறது.
அதே மரபினர் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப "போகம்வாரு" - Bhogamvaru, "சனிவாரு" Sanivaru போன்ற பெயர்களாலும் அறியப்பட்டதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
3. பொட்டுக்கட்டு மட்டுமல்ல — Gajje Puja உள்ளிட்ட சடங்குகள்
1947ஆம் ஆண்டு Madras Devadasis (Prevention of Dedication) Act-ன் சட்ட வரையறை மிகவும் முக்கியமான முதன்மை ஆவணம்.
பெண்ணைத் தெய்வம் அல்லது கோயிலுக்காக அர்ப்பணிக்கும் “dedication” என்பதற்குள் சட்டம் நேரடியாக,
பொட்டுக்கட்டு - Pottukattu
கஜ்ஜேபூஜா - Gajjepuja
முத்ரி - Mudri
கும்பஹாரத்தி - Kumbhaharathy
ஆகிய சடங்குகளைப் பட்டியலிடுகிறது.
இதில் கஜ்ஜேபூஜா- Gajje Puja போன்ற பெயர்கள் தெலுங்கு/தெக்காண கலைஞர் மரபுகளுடன் தொடர்புடையவை என்பது அடுத்தடுத்த ஆய்வுகளில் தெளிவாகிறது.
4. சட்டமே சமூகங்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறது
1947 சட்டத்தின் இன்னொரு பகுதி மிகவும் முக்கியமானது.
அது நேரடியாக:
போகும் - Bogum
கலாவந்துலு - Kalavanthula
சனி - Sani
நாகவாசுலு -Nagavasulu
தேவதாசி -Devadasi
குர்மபுலு -Kurmapulu
போன்ற சமூகங்களின் நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
இவற்றில் கலாவந்துலு - Kalavantulu தெலுங்கு மொழிப் பகுதிகளின் மரபுவழிப் பெண் இசை–நடனக் கலைஞர் சமூகமாக இருந்ததை Oxford ஆய்வும் தனியாக உறுதிப்படுத்துகிறது.
5. ஆந்திர நீதிமன்றத்தில் நேரடிச் சான்று
1950ஆம் ஆண்டு In Re: Saride Narayana and Others என்ற வழக்கு இன்னும் வலுவான சான்று.
அந்த வழக்கே கலாவந்துலு சமூகம் - Kalavanthula community-யின் நடைமுறையைப் பற்றியது.
நீதிமன்றம் அர்ப்பணிப்பு - dedication என்பதற்குள் பொட்டுக்கட்டு - pottukattu, கஜ்ஜேபூஜா gajjepuja, முத்ரி - mudri, கும்பஹாரத்தி - kumbhaharathy ஆகிய சடங்குகளை எடுத்துக்காட்டுகிறது. மேலும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பெண் "மேளம் / நாட்டிய melam/nautch" நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பாலியல் தொழில் வாழ்க்கையை ஏற்றதாகக் கருதப்பட்டு, திருமணம் செய்ய இயலாதவளாகக் கருதப்பட்ட சமூக வழக்கத்தையும் நீதிமன்றம் விவரிக்கிறது.
இது நமது இரண்டாவது வரலாற்றுத் தொகுதிக்கு மிக முக்கியமான நீதித்துறை ஆவணம்.
6. திருமணம் செய்ய முடியாத நிலை — சட்டம் ஏன் தலையிட்டது?
1947 சட்டம் ஒரு பெண் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அதனால் அவள் சட்டபூர்வமான திருமணம் செய்துகொள்ள இயலாதவள் என்று கருதக்கூடாது என்று வெளிப்படையாக அறிவித்தது.
மேலும் அர்ப்பணிப்பு பெண்ணின் சம்மதத்துடன் நடந்திருந்தாலும் அல்லது சம்மதமின்றி நடந்திருந்தாலும் அது சட்டவிரோதம் என்று அறிவித்தது.
இதை சோழர் காலச் சதுரன் சதுரி கல்வெட்டுடன் கலக்காமல் அருகருகே வைத்துப் பார்த்தாலே இரண்டு காலங்களின் சமூக நிலை எவ்வளவு வேறுபட்டிருக்கிறது என்பது தெரிகிறது:
சோழர் கல்வெட்டு: தேவரடியாள் + ஒருவரின் மனைவி.
1947 சட்டம்: dedication செய்யப்பட்ட பெண் திருமணம் செய்ய இயலாதவள் என்ற சமூக வழக்கையே சட்டம் செல்லாததாக்க வேண்டிய நிலை.
இவை இரண்டு தனித்த காலங்களுக்குரிய சான்றுகள்.
7. பாலியல் சுரண்டல் — சட்ட ஆவணமே பதிவு செய்கிறது
1947 சட்டத்தின் முன்னுரை, பெண்களை Devadasi-களாக அர்ப்பணிக்கும் நடைமுறை அவர்களில் பலரை பாலியல் தொழில் வாழ்க்கைக்குக் கொண்டு செல்கிறது என்ற காரணத்தையே சட்டம் கொண்டுவரப்பட்ட காரணங்களில் ஒன்றாகப் பதிவு செய்கிறது.
Kalavanthula சமூகத்தைப் பற்றிய 1950 நீதிமன்ற வழக்கும் melam/nautch நிகழ்த்தும் பெண்ணைப் பாலியல் தொழில் வாழ்க்கையை ஏற்றவளாகக் கருதும் சமூக வழக்கம் இருந்ததாகப் பதிவு செய்கிறது.
இதுதான் பொட்டுக்கட்டு–தேவதாசி வரலாற்றின் பிற்கால சமூகப் பிரச்சினைக்கான நேரடி சட்டச் சான்று.
III. அப்படியானால் “தே....யா” எங்கிருந்து வந்தது?
இன்றைய தமிழில் “தே....யா” என்பது பெண்ணை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தப் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொல் என்பது தெளிவு.
இரண்டு சான்றுத் தொகுப்புகளும் காட்டும் வேறுபாடு
சோழர் கால தேவரடியார் பதிவுகள்: கோயிலுடன் தொடர்புடைய பெண்; கோயில் பணியாளர்; தானம் வழங்குபவர்; சொத்து/பொருளாதாரச் செயல்பாடு கொண்டவர்; சிறப்பு கோயில் மரியாதைகளைப் பெற்றவர்; திருமணமான தேவரடியாருக்கே கல்வெட்டுச் சான்று உள்ளது; “கடவுளுடன் திருமணம்” செய்யும் dedication சடங்கிற்குச் சோழர் காலச் சான்று இல்லை.
பிற்கால பொட்டுக்கட்டு–தேவதாசி பதிவுகள்: பெண்ணைத் தெய்வம்/கோயிலுக்கு அர்ப்பணிப்பு - நேர்ந்து விடுதல் - dedication செய்யும் குறிப்பிட்ட சடங்குகள்; Pottukattu, Gajjepuja உள்ளிட்ட பெயர்கள்; Kalavanthula, Bogum, Sani போன்ற சமூகங்கள்; திருமணத் தடை பற்றிய சமூக வழக்கம்; பாலியல் சுரண்டலுடன் ஏற்பட்ட தொடர்பு; இறுதியில் இதைத் தடை செய்ய வேண்டிய சட்டநிலை.
எனவே சோழர் கால “தேவரடியார்” என்ற கல்வெட்டு அடையாளமும், பிற்கால “பொட்டுக்கட்டு–தேவதாசி” சமூக அமைப்பும் ஒன்றல்ல என்பது வலுவாக உறுதியாகிறது.
சோழர் காலத்தில் கிடைக்காத "கடவுளுக்குத் திருமணம் எனும் அர்ப்பணிப்பு : dedication-as-marriage" சான்று → 17ஆம் நூற்றாண்டுச் சுசீந்திரம் ஓலைச்சுவடியில் உள்ளது ; பிற்கால ஆந்திர/தெலுங்குப் பகுதிகளில் Kalavantulu, Bogum, Sani போன்ற சமூகங்களுடனும் Pottukattu/Gajje Puja போன்ற dedication மரபுகளுடனும் தெளிவான ஆவணச் சான்றுகள் கிடைக்கின்றன.
ஆகவே
“13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகும் 17ஆம் நூற்றாண்டுக்கு முன்னரும் தமிழகக் கோயில் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? விஜயநகர–நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தெலுங்குப் பகுதிகளின் Kalavantulu/Bogam/Sani மரபுகள் தமிழகத்தில் எங்கு முதன்முதலில் பதிவாகின்றன? எப்படி வந்தன ?" எனும் கேள்வி மிக முக்கியமானது.
எனவே இறைச்சேவை செய்த தேவர் அடியாரும் - தே...யா என்று கொச்சையாக அழைக்கப்படும் பெண்களும் ஒன்றல்ல. முழுக்க முழுக்க வேறு வேறு. பொட்டுக்கட்டி கோயிலுக்கு நேர்ந்து விடும் வழக்கமும், அவர்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட அவலமும் தமிழ் இறைசேவையாளர்களான தேவர் அடியார் வாழ்வில் இருந்திருக்கவில்லை.
தேவர் அடியார் என்பார் சிவன் அடியார் போல உண்மையில் இறைவற்கு அடியவர் மட்டுமே. அவர்கள் தேவதாசிகளும் அல்ல, தே...யாக்களும் அல்ல, பொட்டுக்கட்டியவர்களும் அல்லர்.
What's Your Reaction?
Like
0
Dislike
2
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
1
Comments (0)