ரஜினியுடன் 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன்! வி.சி. குகநாதனுடன் மனத்தாபம் ஏன்?

ரஜினிகாந்துடன் 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன், ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தின் பின்னணி, வி.சி. குகநாதனுடன் ஏற்பட்ட மனத்தாபம், ராமராஜன் உள்ளிட்ட திரையுலகப் போட்டிகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

Nov 19, 2026 - 11:54
Updated: 18 hours ago
0 35
ரஜினியுடன் 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன்! வி.சி. குகநாதனுடன் மனத்தாபம் ஏன்?

ரஜினியுடன் கைகோர்த்து 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தொடர் 10

வி.சி. குகநாதன் Vs ரஜினிகாந்த் – மனத்தாபம் எதனால்?

ரஜினியுடன் மோதிய ராமராஜன்!

- நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிவாஜியின் உடல்மொழியைப் பின்பற்றாத நடிகர்களே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பைப் பின்பற்றியே கடந்த இரண்டு மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்து வருவதைத் தமிழ் ரசிகர்கள் கண்டு வருகின்றனர்.

1970 மற்றும் 1980-களில் பல முனைகளிலிருந்து ரஜினிக்குப் போட்டிகள் தொடர்ந்து வந்தன.

கமல்ஹாசனைத் தொடர்ந்து விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராமராஜன் உள்ளிட்ட சில நடிகர்கள் ரஜினிக்குப் போட்டியாகக் களத்தில் இருந்தனர்.

இந்தப் போட்டியில் கமல்ஹாசன் நடித்த 'சகலகலா வல்லவன்', விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்', ராமராஜன் நடித்த 'கரகாட்டக்காரன்' ஆகிய சில படங்களை ரஜினியின் வெற்றிக்கு அருகில் சென்ற படங்கள் என்று கூறலாம்.

மற்றபடி, ரஜினி நடித்த படங்களின் வசூலுக்கும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கும் ஈடாக வேறு எந்தப் படமும் வந்ததில்லை என்பதே உண்மை.

அடுத்து வந்த தலைமுறையைச் சேர்ந்த விஜய், அஜித், விக்ரம் போன்ற நடிகர்களும் ரஜினிக்குப் போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர். 1990-களில் தலைதூக்கிய இந்த நடிகர்கள், ரஜினி படங்களுக்குப் போட்டியாகத் தங்களது படங்களை வெளியிட்டு வந்தனர்.

அதில் விஜய் நடித்த 'கில்லி' உள்ளிட்ட சில படங்கள் போட்டிப் படங்களாகச் சொல்லப்பட்டாலும், ரஜினியின் படங்களின் வசூலைத் தாண்டவில்லை என்பதுதான் நிதர்சனம். அதுபோலவே, அஜித் நடித்த சில படங்களும், 'சாமி' போன்ற விக்ரம் நடித்த படங்களும் ரஜினியின் வசூலைத் தாண்டவில்லை.

அடுத்து வந்த சிலம்பரசன், தனுஷ் போன்ற நடிகர்களின் படங்களும் ரஜினி படங்களுடன் மோதி வெற்றிபெற முடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

சரி... இப்போது ரஜினியின் ஆரம்பகாலத் திரை வாழ்க்கைப் பயணத்தை நோக்கிச் சிறிது தொலைவு செல்வோம்.

ரஜினியை அடையாளம் கண்ட இயக்குநர் வி.சி. குகநாதன்!

'மாங்குடி மைனர்' படத்தில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியைக் காண இயக்குநர் வி.சி. குகநாதன் சென்றபோது, ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டுப் படுத்தபடி பாடல் பாடிக்கொண்டிருந்தார் ரஜினி.

கருப்பான முகம், சுறுசுறுப்பான உடல்மொழி, கலைந்த தலை என அவரைப் பார்த்த குகநாதனுக்கு, ஏதோ இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ரஜினியின் நடிப்பைப் பார்த்து வியந்த குகநாதன், படக்குழுவில் இருந்த மற்றவர்களிடமும் ரஜினி சத்ருகன் சின்ஹாவைப் போல ஸ்டைலாக நடிப்பதாகக் கூறி மகிழ்ச்சியடைந்தார்.

அப்போது 'கனிமுத்து பாப்பா' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனைச் சந்தித்த குகநாதன், அடுத்து ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அதில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

அந்தப் படம்தான் 'புவனா ஒரு கேள்விக்குறி'.

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் – ரஜினிகாந்த் – பஞ்சு அருணாசலம் ஆகிய மூவரின் கூட்டணி அப்போதுதான் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து எஸ்.பி. முத்துராமன் ரஜினியை வைத்து 'முரட்டுக்காளை, பிரியா, நெற்றிக்கண், கழுகு, பாயும் புலி' உள்ளிட்ட 25 படங்களை இயக்கியிருந்தார்.

தனது திரையுலக வாழ்க்கையில், தன்னை வைத்து 25 படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மட்டுமே என்று ரஜினி பலமுறை பெருமையாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

நூறாவது படத்தை இயக்க மறுத்த எஸ்.பி. முத்துராமன்!

'ஸ்ரீ ராகவேந்திரா' திரைப்படம்தான் தனது நூறாவது படமாக இருக்க வேண்டும் என்றும், அந்தப் படத்தை எஸ்.பி. முத்துராமன்தான் இயக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் எண்ணியிருந்தார்.

அதன்படி, இயக்குநர் எஸ்.பி. முத்துராமனிடம் தனது விருப்பத்தை ரஜினி தெரிவித்தபோது, அதை உடனடியாக மறுத்தார் எஸ்.பி. முத்துராமன்.

தான் ஒரு நாத்திகர் என்றும், கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர் என்பதால் இந்தப் படத்தை இயக்க முடியாது என்றும் ரஜினிகாந்திடம் தெரிவித்தார்.

அதற்கு ரஜினியோ, "நீங்கள்தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும். இந்தப் படம் வெற்றி பெறுகிறதா, தோல்வியடைகிறதா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், எனது சரித்திரத்திலும் திரையுலக வரலாற்றிலும் இந்தப் படம் பேசப்பட வேண்டும். அதுதான் எனது குறிக்கோள்" என்று கூறி எஸ்.பி. முத்துராமனைச் சம்மதிக்க வைத்தார்.

இப்படி 25 படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன், 'பாண்டியன்' திரைப்படத்தையடுத்து இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார்.

12 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்!

'பாண்டியன்' படத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு, 25 ஆண்டுகளாகத் தன்னுடன் பணியாற்றிய 12 பேருக்கு ரஜினிகாந்த் உதவி செய்தார்.

அதில் எஸ்.பி. முத்துராமன், விட்டல், புலியூர் சரோஜா உள்ளிட்ட 12 பேர் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.வி.எம். ஸ்டூடியோ அருகே உள்ள அந்த இடத்திற்கு ஏ.வி.எம். காலனி எனப் பெயர் சூட்டி, 12 பேருக்கும் வீடுகளைக் கட்டிக்கொடுத்தார் ரஜினிகாந்த்.

சிவகுமாரால் ரஜினிக்கு ஏற்பட்ட நெருக்கடி!

'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் தன்னுடன் நடித்த சிவகுமாரால் பல வகைகளில் நெருக்கடியை அனுபவித்தார் ரஜினிகாந்த். இதுகுறித்து சிவகுமார் பல மேடைகளில் வாஞ்சையுடன் பேசியிருக்கிறார்.

"கருப்பாக ஒருவர் வந்திருக்கிறார். அவர் பெயர் ரஜினி. அவரது முகத்தைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கவில்லை" என்று ரஜினி குறித்து சிவகுமார் பேசியதாகப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிலர் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

ரஜினி நடிகைகளிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிவகுமார், "நீ போய் வசனத்தை மனப்பாடம் செய். என்னுடன் நின்று நடித்துப் பார். நேரத்தை வீணாக்காதே" என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி ரஜினிக்கு நெருக்கடி கொடுத்ததாகப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தகவல்களை வெளியிட்டனர்.

அதே படத்தில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், ரஜினி பேச வேண்டிய வசனங்கள் அடங்கிய காகிதங்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்லியிருக்கிறார்.

அப்போது ரஜினிக்குத் தமிழ் உச்சரிப்பும் சரியாக வராது. தமிழைப் படிப்பதிலும் சிரமம் இருந்தது. இதனால் படப்பிடிப்புத் தளத்தைவிட்டு ரஜினி ஓடிவிட்டார்.

இதைப் பார்த்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், ஆட்களை அனுப்பி ரஜினியை அழைத்து வருமாறு வலியுறுத்தினார்.

பின்னர் அந்த வசனக் காகிதங்களையெல்லாம் கிழித்துப்போட்டுவிட்டு, "சின்னச் சின்ன வசனங்களைப் பேசினால் போதும். ரஜினி, நீ நடித்தாலே போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஆறுதல் கூறி அவரை நடிக்க வைத்தார் எஸ்.பி. முத்துராமன்.

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிக்க, கதை மற்றும் வசனத்தைப் பஞ்சு அருணாசலம் எழுத, இசைஞானி இளையராஜா இசையமைக்க உருவான அந்த 25 படங்களும் தமிழ் திரையுலகில் வெற்றி வாகை சூடின.

வி.சி. குகநாதனுக்கும் ரஜினிக்கும் ஏற்பட்ட மனத்தாபம்!

அதேபோல், இயக்குநர் வி.சி. குகநாதனும் ரஜினியை வைத்து பல படங்களை இயக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். வி.சி. குகநாதனின் கதைகளில் ரஜினி பல படங்களில் நடித்திருந்தாலும், 'தனிக்காட்டு ராஜா' குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.

ஸ்ரீராம நாயுடு தயாரிப்பில், வி.சி. குகநாதன் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் 'தனிக்காட்டு ராஜா'.

அப்போதைய அரசியல் சூழலில் கலைஞர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. ரஜினிக்கும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம் இருந்த காலகட்டம் அது.

இதையறிந்த கருணாநிதி, ரஜினியை எப்படியாவது அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ளத் துடித்த நேரம். இந்த அரசியல் சூழலைப் புரிந்துகொண்ட இயக்குநர் வி.சி. குகநாதன், அதற்கேற்ப ஒரு பாடலை அந்தப் படத்தில் வைக்கத் திட்டமிட்டார். பாடலாசிரியர் வாலியிடம் இந்தக் கருத்தை சொல்லி அந்தப் பாடலின் முதல்வரிகள் இப்படி அமைக்கப்பட்டன.

"நான் புரட்சித் தலைவரும் அல்ல, டாக்டர் கலைஞரும் அல்ல... ஒரு மனுஷன் உங்க பார்வையில்..."

என்று.

அந்தப் படத்தைப் பார்த்த அதிமுகவில் அதிகாரமிக்கவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அந்த இரண்டு வரிகளை நீக்கச் சொன்னார்.

சரி என்று ஒப்புக்கொண்ட வி.சி. குகநாதன், படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் அந்தப் பாடலை நீக்கவில்லை. பார்வையாளராக வந்திருந்த ஆர்.எம். வீரப்பன், படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தப் பாடலும் படத்தில் வந்துவிட்டது.

படம் முடிந்தவுடன் கனத்த மவுனத்தோடு எழுந்து சென்ற ஆர்.எம். வீரப்பன் பிறகு ரஜினியிடம், "இனி வி.சி. குகநாதனுடன் எந்தப் படத்திலும் பணியாற்றக் கூடாது" என்று சொல்லிவிட்டார்.

படம் வெளியான சில வாரங்களிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தனிக்காட்டு ராஜா மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

ஆனால், ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் வி.சி. குகநாதனுக்கு இன்றுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுபோன்று பல்வேறு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ரஜினிக்கு ஏற்பட்ட மனத்தாபங்கள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்...

தொடரும்...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User