அனுரகுமார திசாநாயகே: இலங்கையின் மிகச்சிறந்த இராசதந்திரியா? | சிறப்புக் கட்டுரை
அனுரகுமார திசாநாயகேயின் இராசதந்திரம்: ராஜபக்ச குடும்ப விசாரணைகள், தமிழர் நல்லிணக்கம், இந்தியா–சீனா–அமெரிக்கா உறவுகள் குறித்த அரசியல் ஆய்வு.
-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், ஆசிரியர் : தமிழ் ஊடகம்
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான சட்ட நடவடிக்கைகள், தமிழர்களுடனான நல்லிணக்க முயற்சிகள், இந்தியா–சீனா–அமெரிக்கா வல்லரசுப் போட்டி எனப் பல்வேறு அரசியல் சவால்களுக்கு இடையே இலங்கையின் தேசிய நலனை முன்னிறுத்தும் அனுரகுமார திசாநாயகேயின் அணுகுமுறை கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
இலங்கை அரசியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாகிறதா?
இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகேயின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்றுநோக்கும்போது இந்தக் கேள்வி எழுகிறது.
இலங்கையைப் பல ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதான ஊழல் விசாரணைகளும் கைதுகளும், ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளும், தமிழர்கள் தொடர்பான சில முக்கிய முடிவுகளும் அவரது ஆட்சியின் அரசியல் திசையை வெளிப்படுத்துகின்றன.
ஆனால் இவற்றைவிட முக்கியமானது, உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளையும் சர்வதேச வல்லரசுகளின் போட்டியையும் அவர் கையாளும் விதம்.
ராஜபக்ச குடும்பம்: சட்டத்தின் ஆட்சிக்கான சோதனை!
மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மீதான விசாரணைகளும் கைதுகளும் இலங்கை அரசியலில் சாதாரண நிகழ்வுகளல்ல.
ஒருகாலத்தில் அரசியல், இராணுவம், நிர்வாகம் எனப் பல அதிகார மையங்களில் செல்வாக்குச் செலுத்திய குடும்பம் இன்று சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கிறது.
இது அரசியல் பழிவாங்கலா அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் முயற்சியா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது சுயாதீன நீதித்துறைதான்.
அரசியல் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்ற நிலையை உருவாக்க முடிந்தால், அது இலங்கையின் ஜனநாயகத்திற்கு முக்கியமான முன்னேற்றமாகும்.
ஈஸ்டர் தாக்குதல்: தண்டனையைத் தாண்டிய நீதி!
ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்குகளில் நீதிமன்றங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முக்கியமானவை.
ஆனால் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுடன் நீதியின் கடமை முடிந்துவிடுவதில்லை.
தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? புலனாய்வுத் தோல்விகளுக்குப் பொறுப்பானவர்கள் யார்? அரசியல் தொடர்புகள் குறித்த சந்தேகங்களுக்கு விடை என்ன?
இந்தக் கேள்விகளுக்கும் நம்பகமான பதில்கள் கிடைக்க வேண்டும்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழர்களே என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
தமிழர்களை அரவணைக்கும் அரசியலா?
தமிழ்ப் பாடகர் சங்கீத்சன் கணேஷ்குமார் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டதும், வெளிநாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் அனோஜனுக்கு உதவ இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளும் கவனிக்கத்தக்கவை.
இவை தமிழர்களின் பிரச்சினைகளை இன அடையாளத்தின் அடிப்படையில் புறக்கணிக்காமல், இலங்கை குடிமக்களின் பிரச்சினைகளாக அணுகுவதற்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படலாம்.
ஆனால் நல்லிணக்கத்திற்கும் அரசியல் தீர்விற்கும் வேறுபாடு உண்டு.
தமிழர்களின் நில உரிமைகள், காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, இராணுவமயமாக்கல், அதிகாரப் பகிர்வு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் எதிர்காலம் ஆகியவற்றில் உறுதியான மாற்றங்கள் ஏற்படும்போதுதான் நல்லிணக்கம் முழுமையான அரசியல் நம்பிக்கையாக மாறும்.
தமிழர்களை அரவணைப்பது என்பது அவர்களுக்கு உதவிகள் செய்வது மட்டுமல்ல; அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுமாகும்.
இந்தியா–சீனா–அமெரிக்கா: முள்ளின் மீது விழுந்த உடை!
இலங்கையின் புவிசார் அரசியல் நிலை மிகவும் நுட்பமானது.
இந்தியாவுக்கு இலங்கை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அண்டை நாடு. சீனாவுக்கு இந்தியப் பெருங்கடலில் பொருளாதார, கடல்சார் முக்கியத்துவம் கொண்ட நாடு. அமெரிக்காவுக்கோ இந்தோ–பசிபிக் அரசியலில் முக்கியமான இடம்.
இந்த மூன்று வல்லரசுகளுடனும் உறவைப் பேணுவது இலங்கைக்கு அவசியம். அதேநேரம் எந்த ஒரு நாட்டின் அரசியல் அல்லது இராணுவ நலன்களுக்கும் முழுமையாகக் கட்டுப்படாமல் இருப்பதும் அவசியம்.
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கும் ஈரானியக் கடற்படைக் கப்பல்களுக்கும் அனுமதி மறுத்ததாக அதிபர் விளக்கிய முடிவுகள், இந்த நடுநிலைக் கொள்கையின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
இந்தியாவுடனான உறவை முறிக்காமல், சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளைத் தொடர்ந்தபடியே, அமெரிக்காவுடனும் உறவைப் பேணுவது எளிதான அரசியல் அல்ல.
முள்ளின் மீது விழுந்த உடையைச் சேதப்படுத்தாமல் எடுப்பதுபோன்ற நுட்பமான இராசதந்திரம் இது!
இலங்கையின் தேசிய நலன் என்பது யாருடைய நலன்?
அனுரகுமார திசாநாயகேயின் அரசியல் அணுகுமுறையை மதிப்பிடும்போது ஒரு அடிப்படைக் கேள்வியை எழுகிறது.
இலங்கையின் தேசிய நலன் என்பது சிங்கள மக்களின் நலன் மட்டுமா? அல்லது தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் உரிமைகளையும் உள்ளடக்கியதா?
இரண்டாவது அணுகுமுறையை நடைமுறையில் நிலைநாட்டினால், அது இலங்கை அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக அமையும்.
மிகச்சிறந்த இராசதந்திரியா அனுரகுமார?
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்வது, இன முரண்பாடுகளைக் கையாள்வது, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பது, வல்லரசுகளின் போட்டியில் இலங்கையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பது என அனுரகுமார திசாநாயகே எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவை அல்ல.
அவற்றை அவர் அணுகும் விதம் அரசியல் முதிர்ச்சியையும் இராசதந்திர நுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.
எனினும், அவரது வெற்றியைத் தீர்மானிப்பது தனிப்பட்ட சில நடவடிக்கைகள் மட்டுமல்ல. நீடித்த சட்டத்தின் ஆட்சி, பொருளாதார முன்னேற்றம், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை, சுயாதீன வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றின் நடைமுறை விளைவுகளே இறுதி அளவுகோல்கள்.
வல்லரசுகளிடம் நாட்டின் இறையாண்மையைக் காப்பதும், சொந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை உறுதிப்படுத்துவதும் ஒரே தேசிய அரசியலின் இரு முகங்கள்.
இந்த இரண்டையும் வெற்றிகரமாக இணைத்தால், அனுரகுமார திசாநாயகே இலங்கையின் இன்னொரு அதிபராக மட்டுமல்ல, தெற்காசியாவின் குறிப்பிடத்தக்க இராசதந்திரியாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)