ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: விரிவடையும் SIT விசாரணை; SRMU கண்ணையா மகன் பிரகாஷுக்கு Look Out Circular
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு விசாரணை விரிவடைகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை, நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த ஆய்வு மற்றும் SRMU கண்ணையா மகன் பிரகாஷுக்கு பிறப்பிக்கப்பட்ட Look Out Circular உள்ளிட்ட புதிய தகவல்கள்.
சென்னை ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வழக்கின் விசாரணை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.
வீரமணி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிடைத்த தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் பல கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வழக்கை விரிவாக விசாரிக்க மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு மேலும் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்து வெளிவரும் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த வழக்கில் முதலில் கிடைத்த காணொலியில் இடம்பெற்ற சிறுமியை காவல்துறையினர் கண்டறிந்து, அவரது வாக்குமூலம் நீதித்துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணையின் எல்லை விரிவடைந்தது.
மேலும் பல பாதிக்கப்பட்டவர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரு காணொலியை மையமாகக் கொண்டு தொடங்கிய வழக்கு, தற்போது பல்வேறு நபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பான விரிவான விசாரணையாக மாறியுள்ளது.
வீரமணி உள்ளிட்ட நால்வர் கைது
வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடைய சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். பின்னர் வீரமணியின் முன்னாள் ஊழியர் கணேசனும் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து வழக்கில் புதிய தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை தரப்பை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே வீரமணியுடன் தொடர்புடைய ஐந்து இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது செல்போன்கள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் விசாரணை வளையத்தில்
வழக்கின் அடுத்த முக்கியத் திருப்பமாக, Southern Railway Mazdoor Union (SRMU) பொதுச் செயலாளர் என். கண்ணையாவின் மகன் பிரகாஷ் தொடர்பாகவும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வீரமணியுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது பிரகாஷின் பெயர் விசாரணையில் வந்ததாகத் தெரிய வந்துள்ளது. அவரை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் முயன்றபோது அவர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரியவந்ததாகவும், இதையடுத்து விமான நிலையங்களுக்கு Look Out Circular பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சரியான பங்கு மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளின் தன்மை இன்னும் விசாரணையில் உள்ளது.
பிரகாஷுடன் தொடர்புடைய பெரம்பூர் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பணம் யாருக்குச் சென்றது? விசாரணையில் புதிய கோணம்
இந்த வழக்கின் முந்தைய விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர யாரேனும் செல்வாக்குச் செலுத்தினார்களா, அதற்காக நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெற்றனவா என்பதையும் காவல்துறை தற்போது ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக, வீரமணியுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளையும் சில மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றங்களையும் விசாரணைக் குழு ஆய்வு செய்து வருவதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
முன்னர் இந்த வழக்கை விசாரித்த உதவி ஆணையர் மற்றும் இரண்டு ஆய்வாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. சென்னை மாநகரக் காவல் முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ், கோயமுத்தூர் மாநகரக் காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரகாஷிடம் விசாரணை நடத்தப்பட்டால், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகளின் தன்மை, பணம் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது, முந்தைய விசாரணைக்கும் அவற்றுக்கும் தொடர்பு உள்ளதா என்பன குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கக்கூடும்.
படங்கள், காணொலிகளை வெளியிடக் கட்டுப்பாடு
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாக்க, வழக்கு தொடர்பான சிறுமிகளின் படங்கள் மற்றும் காணொலிகளை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவது தொடர்பாக நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
காணொலிகள் எவ்வாறு வெளியே கசிந்தன என்பதும் விசாரணையின் மற்றொரு பகுதியாகியுள்ளது.
இதனால் ஜெம் வீரமணி வழக்கு தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், முந்தைய காவல்துறை விசாரணையின் செயல்பாடு, நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆதாரங்கள் வெளியே கசிந்த பின்னணி எனப் பல திசைகளில் விரிவடைந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)