வீரமணி வழக்கு முதல் கள்ளக்குறிச்சி விவகாரம் வரை ! தமிழ்நாடு உளவுத்துறையின் தோல்வியா?
திமுக ஆட்சியில் செந்தில்வேலன், தவெக ஆட்சியில் அஸ்ரா கார்க்! தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை - நுண்ணறிவுப் பிரிவு செயல்பாடுகள், அதிகாரிகளின் செயல்திறன் குறித்து எழும் சர்ச்சைகளும் கேள்விகளும்.
திமுகவுக்கு ஒரு செந்தில்வேலன் ; தவெகாவுக்கு ஒரு அஸ்ரா கார்க் !?
முற்றும் முழுதாகப் பெயர் கெடுகிறதா தமிழ்நாடு காவல்துறைக்கு?!
-தமிழ் ஊடகம் புலனாய்வுச் செய்தியாளர் குழு
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு முதன் முதலாக முதலமைச்சர் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அவருக்கு முந்தைய திமுகவின் தவறுகள், பிழைகள் இனி நடக்காது என்றும் மக்கள் விரும்பும் ஆட்சியைத் தாம் அளிப்பேன் என்றும் உறுதி கூறினார். திமுகவினர் சென்று தகராறு செய்த பரோட்டாக் கடைக்காரரைக்கூட நேரில் சென்று பார்த்து வருத்தம் தெரிவித்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபெல் பரிசு பெற்ற எஸ்தர், இந்திய அரசின் ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட சிறந்த பொருளாதார நிபுணர்கள், என்.ராம் போன்ற பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அறிவுசீவிகள், பகுத்தறிவாளர்கள் கொண்ட பலர் ஆலோசகர்களாக மு.க.ஸ்டாலினுக்கு துணை நிற்கும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. சமூக நீதிக்குக் குரல் கொடுக்கத் தனிக் குழு வேறு அமைக்கப்பட்டது.
இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு அறிவாளிகளைக் கொண்ட பெரும்படையினர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஆலோசகர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் ஆறு மாத காலங்களில் இவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இதில் பலர் ஏதாவது வாரியத்தின் தலைவர் பொறுப்பை வாங்கிக்கொண்டு அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு மவுனித்துவிட்டனர்.
அதன்பிறகு 2022 ம் ஆண்டிலிருந்து அரசுக்கு ஒரே நேரடி ஆலோசகராக இருந்தது அப்போதைய நுண்ணறிவுப் பிரிவு (உளவுத்துறை) IG செந்தில்வேலன் ஐ.பி.எஸ்தான். ஆலோசகராக அல்ல, அவர்தான் எல்லாமுமாகவே செயல்பட்டார் என்றே கூறுகிறார்கள் காவல்துறை குறித்து செய்தி சேகரித்து வரும் மூத்த பத்திரிகையாளர்களும், காவல்துறை தரப்பினரும்.
அதிகாரிகள் இடமாற்றம், பணிமாற்றம் எல்லாம் செந்தில்வேலன் கண்ணசைவில்தான் நடந்தன என்றும் கூறுகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் அரசின் மீது மிகக்கடுமையான மக்கள் எதிரலை உருவானதற்கு அடிப்படையான காரணங்களில் மிக முக்கியமானவை...
01. கட்டுப்பாடில்லாத காவல் அதிகாரிகள்
02. போதை சாக்லேட்டுகள் விற்பனை
03. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : குறிப்பாக அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு எதிரான பாலியல் குற்றம், போக்சோ வீரமணிக்கு எதிரான மூடி மறைக்கப்பட்ட வழக்குகள்...
04. சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள்
05. கொலை, வெட்டு, குத்து வன்முறைகள்
06. பத்திரிகை - ஊடகர்களுக்கு எதிரான பொய் வழக்குகள், குண்டர் சட்டம் பாய்ச்சல்
ஆகியவையே முதலிடம் பிடித்திருந்தன.
இவற்றுக்குக் காரணம் காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவின் 'தோல்வி'தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றும் அவர்கள் நினைவூட்டுகின்றனர்.
நுண்ணறிவுப்பிரிவுக் காவல்துறையின் அடிப்படை வேலையையே தமிழ்நாட்டின் 'நாடியை' அவ்வப்போது பிடித்துப் பார்த்துத் தகவல்கள் சேகரித்து காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் உரிய முன்கூட்டிய தகவல்கள், எச்சரிக்கை தகவல்கள், அவசரத் தகவல்கள் ஆகியவற்றைக் கொடுத்துக்கொண்டு மக்களின் பாதுகாப்பை, அமைதியை, ஆட்சி அதிகாரத்தின் நேர்மையை பின்னின்று நிலைநிறுத்திக் கொண்டே இருப்பதுதான்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட மாநிலப் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கத் தேவையான நுண்ணறிவுத் தகவல்கள் அத்தனையையும் (Data) தரவேண்டும்.
ஆனால், இந்தத் துறையில் அனுபவமோ, ஆற்றலோ பெற்றிராத செந்தில்வேலன் போன்ற அதிகாரிகளை IG நுண்ணறிவுப்பிரிவில் அமரவைத்து தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
செந்தில்வேலன் காலத்தில் நுண்ணறிவுப் பிரிவு முழுத் தோல்வி கண்டது என்பதற்கு ஒரே சான்று, கொளத்தூர் தொகுதியில் அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினே தோற்றுப் போனதுதான் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அவர்கள்.
ஒரு முதலமைச்சர் தொகுதியில் என்ன நடக்கிறது என்று கூடக் கண்டுபிடித்து முன்கூட்டியே கூற முடியாத அளவுக்கு நுண்ணறிவுப்பிரிவினரும், என்.ராம் போன்ற பத்திரிகைப் பிதாமகன்களும் இருந்திருக்கிறார்கள் என்றால் இதைவிட என்ன ஒரு மோசமான நிலை இருக்க முடியும்?! என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
சங்கர் ஜிவால் ஐபிஎஸ்-க்குப் பிறகு முறையாக டிஜிபி நியமனம் செய்யாமல் பொறுப்பு டிஜிபி ஒருவரை நியமித்த கூத்து நடந்ததும் செந்தில் வேலன் காலத்தில்தான். காரணம், தானே நிழல் டிஜிபியாக செயல்படவேண்டும் என்பதாலேயே அவர் அவ்வாறு இழுத்தடித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் FIR கசிய விடப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதற்காக அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டபோது உச்சநீதிமன்றம் சென்று அருண் ஐபிஎஸ்-காக தமிழ்நாடு அரசே மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை பெற்றதற்கும் பின்னணியில் செந்தில்வேலன் ஐபிஎஸ் இருந்திருக்கலாம் என்றே கருதுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தமிழ்நாடு காவல்துறை, நீதிமன்றத்தால் அதிக அளவு 'குட்டு' வாங்கியதன் பின்னணியிலும் செந்தில்வேலனின் 'செயல் திறனே' இருந்ததாகக் கூறுகிறார்கள்.
இப்படி ஒரு பெரிய பட்டியலை நாம் பேசிய பலரும் வாசித்துக்கொண்டே, அந்த செந்தில்வேலனுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல இப்போதைய நுண்ணறிவுப்பிரிவு IG அஸ்ரா கார்க் என்று சொன்னதுதான் ஹைலைட்.
அஸ்ரா கார்க்கும் செந்தில்வேலனும் ஒரே காலகட்டத்தில் IPS பணியில் சேர்ந்தவர்கள், கிட்டத்தட்ட ஒரே பேட்ஜ் என்று கூறி அடுத்த அதிர்ச்சியை கிளப்பும் அவர்கள், நன்றாகக் கூர்ந்து கவனித்தால் கடந்த திமுக ஆட்சியில் செந்தில்வேலன் எப்படி சொதப்பினரோ அதேபோல இந்தத் தவெக ஆட்சியில் அஸ்ரா கார்க் சொதப்பி வருகிறார் என்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் விவகாரத்தை திமுகவும், அதிமுகவும் அடி ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கிறது என்று நுண்ணறிவு செய்து முதலமைச்சரை எச்சரித்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை பூதாகரமாக ஆகியிருக்காது, தவெக அரசுக்கு இந்த அளவு Damage ஏற்பட்டிருக்காது என்கிறார்கள்.
தொடக்கத்திலேயே அருள் விக்னேஷ் மீது அரசே நடவடிக்கை எடுத்திருந்தால் நீதிமன்றம் வரை பிரச்சனை போயிருக்காது. இதை நீதிபதி வி.லட்சுமி நாராயணனே சுட்டிக்காட்டியிருக்கிறார் பாருங்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில், இதே கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி விபரீத மரணம் அதைத் தொடர்ந்து கலவரம், அதேபோல கள்ளச்சாராயச் சாவு என அந்த அளவுக்குக் கொழுந்து விட்டு எரிந்தததற்குக் காரணம் உளவுத்துறையின் தோல்விதான் என்று அப்போதே விமர்சனம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பெரிய இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றும் அங்கே உளவுத்துறை இன்னமும் வலுவாக இல்லை என்பதை சட்டமன்ற உறுப்பினர் விவகாரமும் நிரூபித்துவிட்டது என்கிறார்கள்.
ஜோசப் விஜய் அரசு முன்னனுபவம் இல்லாத ஒரு அரசாக இருப்பதால் அனுபவம் வாய்ந்த நல்ல அதிகாரிகள்தான் வழிகாட்டலாக இருக்க முடியும் எனும் நிலையில் அஸ்ரா கார்க் போன்ற அதிகாரிகள் தொடர்ந்து இந்த அரசை இக்கட்டில் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களோ என்று ஐயம் வருகிறது என்றும் வருத்தப் படுகிறார்கள் அவர்கள்.
வீரமணி மீதான போக்சோ வழக்கில் மிக வேகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இப்போது அதில் பழைய வேகம் வெகுவாகக் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புலனாய்வுச் செய்தியாளர்கள், அதில் தொடர்புடைய அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட சக ஐபிஎஸ் அதிகாரிகளைக் காப்பாற்ற சில ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகப் பேச்சு காவல்துறை வட்டாரத்திலேயே பரவுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.
எந்தத் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு - வெட்டுக்குத்து - போதை மருந்து என்று குற்றச்சாட்டுகள் நிரம்பி வழிந்ததோ அதே குற்றச்சாட்டுகளை அதே திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த ஜோசப் விஜய் ஆட்சியின் மீது சுமத்தும் அளவுக்கு 'அதே டெய்லர் அதே வாடகை' எனும் அளவில்தான் நுண்ணறிவுப் பிரிவு உள்ளதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜோசப் விஜய்க்கு வாக்களித்தவர்கள் பெரும்பாலும் 19 வயது முதல் 39 வயது வரையிலான பெண்கள். எனவே "இது பெண்களுக்கான ஆட்சி" என்ற அவரது 'முழக்கமே' இந்த ஆட்சியின் Tag ஆக இருந்தது. ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இந்த அரசு "பெண் ஆட்சியாளருக்கே பாதுகாப்பற்ற அரசு" என்ற முத்திரை விழும் அளவுக்கு நுண்ணறிவுப்பிரிவு என்ன செய்துகொண்டிருந்தது என்றும் சூடாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதையெல்லாம் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு போகவேண்டிய நுண்ணறிவுப்பிரிவு எங்கே தவறவிடுகிறது என்று தெரிவில்லை என்றும் புலம்பாத குறையாகக் கூறுகின்றனர்.
இதில் என்ன பிரச்னை என்றால் எப்படி செந்தில்வேலனுக்கு நுண்ணறிவுப் பிரிவில் அனுபவம் இல்லையோ அதேபோல அஸ்ரா கார்க்குக்கும் இதில் அனுபவம் இல்லை. ஆனால் அவரை IG - ADGP எனக் கடகடவென மேலே அமரவைத்ததன் விளைவு இன்று காவல்துறை திணறிக்கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
அஸ்ரா கார்க் இந்திய அரசின் சிபிஐ-யில் 2022 ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் பணியாற்றிய போதே பல வழக்குகளில் சொதப்பிய காரணத்தால்தான் அவரை அதிலிருந்து வெளியேற்றினார்கள் என்றும் ஒரு தகவல் கசிகிறது என்று சொல்லும் விவரமறிந்தவர்கள், இந்த நுண்ணறிவுப்பிரிவை வைத்துக்கொண்டு ஜோசப் விஜய் நிம்மதியாக ஆட்சி ஆள முடியாது என்கின்றனர்.
உண்மையைச் சொல்லப்போனால் தவெக தனித்து நிற்கிறது. எதிரே திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகப் படை திரட்டி நிற்கின்றன. ஆறுமாத காலம் முடிந்தவுடன் இப்போது எல்லாக் கட்சிகளும் சுற்றி வளைத்துத் தாக்குகின்றன....தவெக அரசு செய்கின்ற நல்ல செயல்கள்கூட மக்களிடம் எதிர்மறையாகச் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் விட ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு எடுக்க முடிவு செய்துள்ள இரகசிய நடவடிக்கைகள் பல எதிர்க்கட்சிகளுக்கு முன்கூட்டியே போவதாகச் சொல்கிறார்கள் என்றும் கொசுறுத் தகவல் ஒன்றைச் சொல்லி நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள் நாம் சந்தித்துப் பேசிய விவரம் அறிந்தவர்கள்.
குறிப்பு :
நமது புலனாய்வுச் செய்தியாளர் குழு சேகரித்த இந்தத் தகவல்கள் அதிகாரிகளைக் குறை கூறுவதற்காக அல்ல, அவர்களின் செயல்திறன்கள் எப்படிப்பட்டவை, எதனால் காவல்துறையில் இவ்வளவு சொதப்பல்கள் என்று அறிந்து கொள்வதற்காகவே.
இந்தத் தரவுகளைக் கொண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் விசாரித்து நம்மிடம் பகிரப்பட்ட தகவல்களில் உண்மை இருந்தால் அதனைச் சரிசெய்து கொள்ளட்டும் என்கிற பொது நலன் அடிப்படையிலயே இது வெளியிடப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)