கராத்தே மணி மரணத்தை முன்கூட்டியே கணித்த ரஜினி! | சூப்பர் ஸ்டார் தொடர் 11
கராத்தே மணியின் வாழ்க்கை, ரஜினிகாந்துடனான மோதல், நட்பு, அவரது வீழ்ச்சி மற்றும் ரஜினியின் எச்சரிக்கை குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
கராத்தே மணி மரணத்தை முன்கூட்டியே கணித்த ரஜினி!
பத்திரிகையாளர் நாச்சி. செல்வராஜ் எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர் - 11
“பயமா! எனக்கா!” என்று திரைப்படத்தில் ரஜினி பேசும் வசனத்திற்கு ஏற்ப, தனது நிஜ வாழ்க்கையிலும் அந்த வார்த்தைகளை நிரூபித்துக் காட்டியவர் ரஜினிகாந்த்.
1970-களின் இறுதிப் பகுதிகளிலும், 1980-களின் தொடக்கத்திலும் ரஜினி சந்தித்த துரோகங்களும், ஏமாற்றங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அதற்காக அவர் எவரிடமும் சமரசம் செய்துகொள்ளவும் இல்லை. சில இடங்களில் நேரடியாக மோதிய வரலாறும் உண்டு.
சில மோதல்கள் அப்போதே சமாதானத்தில் முடிந்தன. வேறு சில சம்பவங்கள் விரோதங்களை வளர்த்துக்கொண்டே சென்றன. இத்தகைய சம்பவங்களை ரஜினியின் வாழ்க்கைப் பயணத்தின் காலடிச் சுவடுகள் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
திரையுலகில் பாகவதர் காலம் முதல் இன்றைய காலம் வரை விருந்தோம்பல் என்பது மறுக்க முடியாத ஓர் அம்சம். குறிப்பாக, மாலை நேரங்களில் நடைபெறும் உற்சாக விருந்துகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், சில நேரங்களில் இத்தகைய விருந்துகள் சண்டையிலும் மோதலிலும் முடிவதும் உண்டு. அப்படியொரு சம்பவம்தான் ரஜினியின் வாழ்க்கையிலும் நடந்தது.
சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற உற்சாக விருந்து நிகழ்ச்சியின்போது, கராத்தே மணிக்கும் ரஜினிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, “நான் யார் தெரியுமா?” என்று கராத்தே மணி ரஜினியைப் பார்த்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு, “நீ எவனாக இருந்தால் எனக்கென்ன?” என்று பதிலளித்த ரஜினி, சட்டென்று கராத்தே மணியைத் தாக்கி, அவரது கையை முறுக்கி, கழுத்தில் காலையும் வைத்து விட்டார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத கராத்தே மணி நிலைகுலைந்து நின்றார். அவருடன் வந்திருந்த மணியனின் உதவியாளரான 'கெட்டப்' ராஜேந்திரன் (இன்றும் உயிருடன் இருப்பவர்), இருவருக்கும் இடையே சமாதானம் பேசி மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
பின்னர் கராத்தே மணியும் ரஜினிகாந்தும் நண்பர்களாக மாறினர். அது வேறு கதை!
இளைஞர்களின் முன்னுதாரணமாக இருந்த கராத்தே மணி!
1970-களில் தமிழகத்தில் ஆர்.வி.டி. கராத்தே மணி என்றால், இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த கராத்தே மணி, இறுதித் தேர்வை எழுதி மருத்துவராக வேண்டும் என்ற நிலையில் இருந்தவர். ஆனால், கராத்தே மீதான ஆர்வம் அவரை முழுமையாக ஆட்கொண்டதால், மருத்துவத் துறைக்குச் செல்லாமல் கராத்தே துறையிலேயே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கராத்தே பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆசியாவிலேயே முதன்முதலில் கருப்புப் பட்டம் பெற்றவர்களில் ஒருவர் என்றும், தமிழகக் காவல்துறை அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடத்தியவர் என்றும், அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பாதுகாவலராக இருந்தவர் என்றும் பல்வேறு பெருமைகளைக் கொண்டிருந்தார்.
இத்தனை பொறுப்புகளையும் வகித்த கராத்தே மணி, ஒரு காலத்தில் புகைப்பிடிப்பவர்களைக் கண்டாலே அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரிக்கும் பழக்கமுடையவராக இருந்தார். மது அருந்துவதையும் முற்றிலும் தவிர்த்து வந்தார்.
ஆனால், திரையுலகில் நுழைந்த பின்னர் அவரது வாழ்க்கை முறையே எதிர்மறையாக மாறத் தொடங்கியது.
திரையுலகில் கராத்தே மணியின் புதிய முகம்!
தேவர் பிலிம்ஸ் தயாரித்த 'அன்புக்கு நான் அடிமை' என்ற ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார் கராத்தே மணி.
அந்தப் படத்தில் அவரது உடல் தோற்றமும், கராத்தே வீரருக்கே உரிய உடல்மொழியும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்துடன் இணைந்து 'ரங்கா' திரைப்படத்திலும் கராத்தே மணி நடித்தார்.
பின்னர் தனது விருப்பப்படி 'தங்கக் கோப்பை', 'அஞ்சாத சிங்கம்' போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
ஆனால், திரையுலகில் கிடைத்த புகழும் செல்வாக்கும் அவரிடம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தின. நாள்தோறும் பார்ட்டி, மது, மாது எனப் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அவர் ஆளானதாக அக்காலத்தில் செய்திகள் வெளியாகின.
அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகையுடனான தொடர்பு குறித்தும் அப்போது பேசப்பட்டது. ஒரு நாளைக்கு 18 பீர் பாட்டில்கள் வரை அருந்தியதாகக் கராத்தே மணி குறித்து நாளிதழ்களில் கிசுகிசுக்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அவரது நண்பரான ரஜினிகாந்த், கராத்தே மணியை நட்பு ரீதியாக எச்சரித்தார்.
வாடா, போடா என்று உரிமையுடன் அழைத்துக்கொள்ளும் நண்பரான கராத்தே மணியிடம்,
“டேய் மணி, நீ இப்படியே போய்க்கொண்டிருந்தால் சீக்கிரமாகவே செத்துப்போய்விடுவாய். பார்த்து, கவனமாக இரு!” என்று ரஜினிகாந்த் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் எச்சரிக்கையும் கராத்தே மணியின் இறுதி வாழ்க்கையும்!
அதே காலகட்டத்தில், ஒரு வீட்டில் நடைபெற்ற போதை விருந்தில் இயக்குநர் ஆர்.சி. சக்திக்கும் கராத்தே மணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அந்த மோதல் முற்றிய நிலையில், ஆர்.சி. சக்தியைக் கொல்வதற்காகத் துப்பாக்கி எடுக்கச் சென்ற கராத்தே மணியை, அவரது உதவியாளர்கள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை ரஜினிகாந்தை முதன்முதலில் கதாநாயகனாக வைத்து திரைப்படம் தயாரித்த கலைஞானம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
காலம் செல்லச் செல்ல கராத்தே மணி நோய்வாய்ப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழத் தொடங்கினார். இறுதியில் தனது 50-ஆவது வயதில் அவர் காலமானார்.
ஒருகாலத்தில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த கராத்தே மணியின் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வந்தது.
ரஜினியின் ஆரம்பகால நண்பர்கள்!
அதேபோல், திரைப்பட இயக்குநர் நட்ராஜ், நடிகர் சிவச்சந்திரன், நடிகர் தியாகராஜன் போன்றோரும் ரஜினிகாந்தின் ஆரம்பகால நண்பர்கள்.
இவர்கள் அனைவருமே ரஜினியை வாடா, போடா என்று உரிமையுடன் அழைக்கும் நெருங்கிய நண்பர்கள்.
சென்னை சி.ஐ.டி. காலனியில் இருந்த ஒரு சிறிய அறையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலமும் உண்டு. ஒரே தேநீரைப் பகிர்ந்து குடிப்பது, ஒரே சிகரெட்டை மாறி மாறிப் புகைப்பது என எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
இதுகுறித்து நடிகர் சிவச்சந்திரன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது,
“12சி பேருந்தில்தான் நானும் ரஜினியும் படப்பிடிப்புக்குச் செல்வோம். ஒரே சிகரெட்டை மாறி மாறிப் புகைப்போம். அப்போது எங்களுக்குக் கிடைத்த சம்பளம் சில நூறு ரூபாய்தான்”
என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.
கண்ணாடி முன் நின்று நடிப்புப் பயிற்சி!
ரஜினியின் கடுமையான உழைப்புதான் அவரைத் திரைத்துறையில் படிப்படியாக வளர்த்தெடுத்தது.
அடுத்த நாள் என்ன காட்சியைப் படமாக்கப் போகிறார்கள், என்ன வசனம் பேச வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்பத் தயாராகிவிடுவார் ரஜினி.
ரசாயனம் பூசப்படாத கண்ணாடி முன் நின்று, அதில் அரைகுறையாகத் தெரியும் தனது முகத்தைப் பல கோணங்களில் மாற்றிக்கொண்டு நடிப்புப் பயிற்சி செய்வார்.
ஸ்டைலாகச் சிகரெட் பிடிப்பது, கலைந்து கிடக்கும் தனது தலைமுடியை ஊதிச் சரிசெய்வது, வேகமாக நடந்து வருவது, தனித்துவமான தமிழ் உச்சரிப்பு எனப் பல அம்சங்கள் ரஜினியின் தனித்துவமான அடையாளங்களாக மாறின.
தன்னைப் படத்தில் ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடமும் ரஜினி கனிவுடன் நடந்துகொள்வார். அவருடைய நடிப்பையும் தனித்துவமான அணுகுமுறையையும் பார்த்து அனைவரும் பிரமிக்கத் தொடங்கினர்.
ரஜினிக்கு நடிப்புச் சொல்லிக்கொடுக்க வேண்டிய சிலர்கூட, அவருடைய இயல்பான நடிப்புத் திறனைப் பார்த்து, “நீங்களே நடிங்க தலைவா!” என்று கூறும் அளவுக்கு அப்போதே அவரது திறமை வெளிப்பட்டது.
ஒவ்வொரு திரைப்படத்திற்குப் பின்னரும் மாற்றங்களும் ஏற்றங்களும் ரஜினியை நோக்கி வரத் தொடங்கின. பணம், புகழ், அந்தஸ்து என அனைத்தும் மின்னல் வேகத்தில் அவரை உயர்த்திக்கொண்டே சென்றன.
ரஜினியைக் காதலித்த லதா!
கட்டுக்கடங்காத காளையாக வலம் வந்துகொண்டிருந்த ரஜினிகாந்தை, அன்றைய பின்னணிப் பாடகியான லதா காதலிப்பதாகத் தெரிவித்தார்.
செய்தியாளராகப் பேட்டி எடுக்கச் சென்ற லதா, ரஜினியிடம் தனது காதலை எப்படித் தெரிவித்தார்? அந்தக் காதலை ரஜினி எப்படிச் சமாளித்தார்?
அந்தச் சுவாரசியமான காதல் கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
தொடரும்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)