கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டி? துர்கா ஸ்டாலின் அழுத்தம் தருகிறாரா?

கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? துர்கா ஸ்டாலினின் விருப்பம் என்ன? கருணாநிதிக்குப் பிறகு திமுகவில் உருவான உட்கட்சிப் பிரச்சினைகள், கிச்சன் கேபினட் ஆதிக்கம் குறித்து பத்திரிகையாளர் நாச்சி செல்வராஜ் அலசுகிறார்.

Nov 20, 2026 - 20:55
Updated: 10 hours ago
0 32
கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டி? துர்கா ஸ்டாலின் அழுத்தம் தருகிறாரா?

கொளத்தூர் இடைத்தேர்தல் ; மு.க.ஸ்டாலின் போட்டி?!

அழுத்தம் தருகிறாரா திருமதி துர்கா ஸ்டாலின்?

-நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இடைத்தேர்தல் என்றாலே பெரும்பாலும் ஆளுங்கட்சியே வெற்றி பெறுவது என்பது கடந்த காலப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தும் செய்தி.

முதலமைச்சராக ஜோசப் விஜய் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்தன.

கடந்த 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்விக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியிலும் நிர்வாகிகள் மத்தியிலும் தொடர் சலசலப்புகள் ஏற்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொளத்தூரில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவிற்குப் பிறகு அடுத்து நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவாரா? அல்லது கொளத்தூர் இடைத் தேர்தல் குறித்த அவரது முடிவு என்னவாக இருக்கும் எனும் கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

பொதுவாகவே 'திமுக நிர்வாக ரீதியாக ஒரு முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அதில் ஓரளவுக்கு சனநாயக நிலைப்பாடு இருக்கும்.' என்பது கலைஞர் கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை இருந்த திமுகவின் நிலை.

கட்சி மற்றும் ஆட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள் சிலர்.

மு.க. ஸ்டாலின் முதன்முறையாக 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1996 இல் மீண்டும் அவர் வெற்றி பெற்றபோதும்கூட அப்போதும் அவர் அமைச்சராக்கப்படவில்லை.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னரே மு.க.ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு மு.க.அழகிரி மத்திய அமைச்சரான போது 'புரோட்டாகால்' பிரச்சனையால் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின் என்பதை நினைவூட்டுகிறார்கள் நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள்.

உட்கட்சி சனநாயகம் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி நீண்ட இடைவெளிக்குப் பிறகே பொறுப்பு வழங்கினார் என்பதைச் சுட்டிக்காட்டும் அவர்கள், ஆனால் ஸ்டாலின் திமுக தலைவர் ஆனபிறகு , இரண்டே ஆண்டுகளில் அவரது மகன் உதயநிதி கட்சி மற்றும் ஆட்சியின் உயர் பொறுப்பில் அமரவைக்கப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

அதாவது 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் வென்ற உதயநிதி, அடுத்த ஓராண்டில் அமைச்சர், அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் என்று இரண்டே ஆண்டில் உச்சத்தில் அமரவைக்கப்பட்டார்.

இதற்குப் பின்னணியில் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இருப்பதாக திமுகவினருக்குள் அப்போது விவாதிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள் விவரம் அறிந்த நிர்வாகிகள்.

2012 க்கு பிறகு கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், செயல் தலைவராக  கட்சியின் அதிகாரத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்த போதும்கூட, துர்கா ஸ்டாலினின் தலையீடு கட்சி நிர்வாகத்தில் இருந்தது எனத் தொண்டர்கள் மத்தியில் பேச்சு நிலவியது என்பதையும் நாம் சந்தித்துப் பேசிய நிர்வாகிகள் மறுக்கவில்லை.

மேலும், திமுக கட்சிக்குள் துர்கா ஸ்டாலினின் தலையீடு எப்போதிருந்து தொடங்கியது என்பதை நினைவு கூறும்போது இந்த நிகழ்வை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மறைந்த பழக்கடை ஜெ. அன்பழகனை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுவாக கருணாநிதிக்கு ஜெ.அன்பழகன் மீது அவ்வளவு பெரிய அதிருப்தியெல்லாம் இருந்திருக்கவில்லை. ஆனால், அவரை மாற்ற வேண்டும் என்ற நிலையில் மு.க.ஸ்டாலினும் உறுதியாக இருந்தார்.

அப்போது தன்னை மாற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் ஜெ.அன்பழகன் துர்கா ஸ்டாலினை சந்தித்து, வெள்ளித்தட்டில் பணம், நகை, பட்டுப் புடவை என சமர்ப்பித்து வணங்கி தன்னை மாற்றாமல் இருக்க வேண்டிக்கொண்டார் என்றும் அதன்பிறகு அவர் இறுதிவரை மாற்றப்படவில்லை என்றும் கூறுகிறார்கள் திமுக உள்ளரசியல் தெரிந்த அந்த நிர்வாகிகள்.

கலைஞர் கருணாநிதி உடல்நலம் குன்றியதற்குப் பிறகு துர்கா ஸ்டாலின் தலையிட்ட பெரிய கட்சி சார்ந்த முதல் முடிவு இது என்கிறார்கள் அவர்கள்.

மு.க.ஸ்டாலின் செயல்பாட்டில் இருக்கும்போதே உதயநிதிக்கு கட்சி, ஆட்சி, அதிகாரத்தில் உடனடி முக்கியத்துவம் தந்ததன் பின்னணியில் துர்கா ஸ்டாலின் இருந்தார் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை என்று கூறும் திமுக நிர்வாகிகள், இந்த முடிவு, கலைஞர் கருணாநிதியால் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மூத்த மாவட்டச் செயலாளர் - அமைச்சர்களைத் தொடர்ந்து சோர்ந்து போகவைத்துவிட்டது என்கின்றனர்.

கட்சியின் தூண்கள் போல இருந்த மூத்த தலைவர்கள் நடத்தப்பட்ட விதமும், அவமதிக்கப்பட்ட விதத்தையும் பார்த்து கலைஞர் கருணாநிதியின் உடன்பிறப்புகள் நொந்து போய்க்கிடக்கின்றனர் என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

திமுகவின் வேட்பாளர்கள் எல்லோரும் தோற்றுப்போய்விட்ட காலங்களில்கூட கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்ற திமுகவின் வரலாற்றில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றுப்போய் பிறர் வெற்றி பெற்ற புதிய அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார்கள் திமுகவின் உடன்பிறப்புகள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில் கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று ஒரு பிரிவினரும், போட்டியிட வேண்டாம் என்று மற்றொரு பிரிவினரும் சொல்லி வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவது சரியான முடிவு அல்ல என்றும், ஒருவேளை மீண்டும் தோற்றுப்போனால் அது ஒட்டுமொத்த திமுவுக்கும் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் சிந்திப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பது திருமதி துர்கா ஸ்டாலினின் முடிவும், விருப்பமும் என்கிறார்கள்.

இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அமருவார். உதயநிதி ஸ்டாலின் துணைத்தலைவராக அமர வேண்டியிருக்கும்.

யார் எடுக்கும் முடிவு நடைமுறைக்கு வரப்போகிறது என்பது இடைத்தேர்தலில் தெரிந்துவிடும். அத்தகைய முடிவு சோர்ந்து போய்கிடக்கும் தங்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமைய வேண்டியது திமுகவின் எதிர்காலத்திற்கும் அவசியமும் கூட என்கிறார்கள் நாம் சந்தித்துப் பேசிய உடன்பிறப்புகள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User