திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசின் அவசர மேல்முறையீடு ஏன்?

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது ஏன்? மத நல்லிணக்கம், வழிபாட்டு உரிமை குறித்து அலசுகிறது தமிழ் ஊடகம் தலையங்கம்.

Nov 23, 2026 - 09:46
Updated: 9 hours ago
0 22
திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசின் அவசர மேல்முறையீடு ஏன்?

திருப்பரங்குன்றம் விவகாரம்: மத அரசியலுக்கு துணைபோகிறதா தவெக அரசு?

இருதரப்புக்கும் ஏற்ற தீர்வை எட்டுவதற்குப் பதிலாக அவசர மேல்முறையீடு ஏன்?

பின்னணி என்ன?

--தமிழ் ஊடகம் ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் திடீரென உருவானதல்ல. 2025 ஜனவரியில் ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மலைக்குச் சென்றபோது, அவருடன் வந்தவர்கள் அங்கு அசைவ உணவு உட்கொண்டதாகப் புகைப்படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. நவாஸ் கனி தாம் அசைவ உணவு உட்கொள்ளவில்லை என்று மறுத்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மலையில் ஆடு, கோழி பலியிடுதல், தர்கா வழிபாடு, மலைக்கான உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தன.

இதன் தொடர்ச்சியாகத் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற வழக்கும் முக்கியத்துவம் பெற்றது.

இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக அவசர மனு ஏன்?

நவம்பர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம், நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை அனுமதி வழங்கியது.

இது இறுதித் தீர்ப்பு அல்ல. தீபத்தூணின் தன்மை, நிலத்தின் உரிமை, வழிபாட்டு மரபு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளையும் உச்சநீதிமன்றம் இன்னும் இறுதியாகத் தீர்மானிக்கவில்லை. இந்த ஏற்பாடு எதிர்காலத்தில் எந்தத் தரப்புக்கும் நிரந்தர உரிமையை வழங்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் அரசின் நிலைப்பாட்டையும் ஆட்சேபனைகளையும் விரிவாக முன்வைக்க வாய்ப்பிருந்தது. ஆனால், அவசரமாக மறுஆய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

அரசு முன்வைக்கும் சட்டம், பாதுகாப்பு, மத நல்லிணக்கக் காரணங்கள் விவாதிக்கப்பட வேண்டியவைதான். ஆனால், நீதிமன்றம் ஏற்கெனவே பொதுமக்கள் கூடுவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், முழக்கமிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருதரப்பினரின் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாக்கும் வழியை ஆராய்ந்திருக்கலாமே?

யாரைத் திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை?

மத நல்லிணக்கம் என்பது ஒரு தரப்பின் உணர்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதல்ல. இந்து மக்களின் வழிபாட்டு உரிமையும், இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தர்கா நிர்வாகத்தின் ஆட்சேபனையை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் கருத்தாகக் கருத முடியாது. அதேபோல், இந்த விவகாரத்தில் எழும் அனைத்து எதிர்ப்புகளையும் மதவாதமாகவும் ஒதுக்கிவிட முடியாது.

சட்டத்தின் அடிப்படையில் இருதரப்பினருக்கும் ஏற்ற தீர்வை உருவாக்குவதுதான் அரசின் பொறுப்பு.

ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய அரசியல் அணுகுமுறைகளிலிருந்து மாறுபட்ட நிர்வாகத்தை வழங்குவதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் அதன் அணுகுமுறை என்ன?

நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் தனது சட்டரீதியான நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்து, இருதரப்பினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் தீர்வை எட்டுவதற்கு அரசு முயற்சிக்கலாமே?

சாதி, மத உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்தும் போக்குக்கு எந்த அரசும் துணைபோகக் கூடாது. மத நல்லிணக்கம் என்பது உரிமைகளை மறுப்பதில் இல்லை; உரிமைகளை மதித்து இணக்கமான தீர்வைக் காண்பதில்தான் இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User