ரஜினி மீது கஞ்சா வழக்கு போட்டாரா எம்ஜிஆர்? 1979 ரஜினி கைது பின்னணி என்ன? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்-2
1979-ல் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? ராயப்பேட்டை கைது, கஞ்சா வழக்கு என்ற தகவல், பத்திரிகையாளர் ஜெயமணி புகார், எம்ஜிஆர்–ரஜினி மோதல் குறித்த அக்கால சினிமா வட்டாரத் தகவல்களை நாச்சி.செல்வராஜ் விவரிக்கிறார்.
-பத்திரிகையாளர் நாச்சி.செல்வராஜ்
1975 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் துணை நடிகராக தமிழ்த் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.
பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் 1975 ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து ரகுபதி ராகவ ராஜாராம், அவர்கள், ஆறு புஷ்பங்கள் ஆடு புலி ஆட்டம் போன்ற படங்களில் துணை நடிகராகத் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
1977 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர் தேர்வு செய்யப்பட்டார். அதே காலகட்டத்தில் திரையுலகத்தில் ரஜினிகாந்த் மக்களால் அறியப்பட்ட ஒரு வில்லனாக வலம் வந்தார்.
கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த ரஜினிகாந்த்தின் ஆரம்ப கால சம்பளம் சில ஆயிரங்கள் மட்டுமே இருந்தது. தனது கடும் உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் குறுகிய காலத்தில் உயரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த், கலைஞானம் தயாரித்த பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சாண்டோ எம் சின்னப்ப தேவர் அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்களை நடித்தார். ரஜினி நடித்த தாயின் மீது சத்தியம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அப்போது ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் "ஈஸ்ட்மென்" கலர் படங்களாக வெளியாகின. இதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ரஜினி மீது அன்பு கொண்டிருந்த தயாரிப்பாளர் பாலாஜி ரஜினியிடம் பேசினார். ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்புவதாகவும் அதற்கு சம்பளம் என்ன என்றும் பாலாஜி கேட்டார்.
அதற்கு ரஜினிகாந்த், எனது சம்பளம் 70 ஆயிரம் அல்லது 80 ஆயிரம் என்று சொல்ல பாலாஜி திகைத்து நின்றார்.
ஆச்சரியப்பட்ட ரஜினி "என்ன என்ன எதுனால இப்படி கேக்குறீங்க" என அப்பாவியாகக் கேட்க, "உங்க பலம் என்னனு உங்களுக்கு இன்னும் தெரியல, விநியோகஸ்தர்கள் உங்க படத்தை வைத்து ரொம்ப சம்பாதிக்கிறாங்க...உங்களுக்கு அது புரியல என ஆதங்கப்பட்ட பாலாஜி, அடுத்த என்னுடைய படத்திற்கு நீங்கதான் கதாநாயகன் அந்த படத்தில் உங்களுக்கு இரட்டை வேடம் என்றார், கூடவே உங்கள சம்பளம் என்ன தெரியுமா... 10 லட்சம்" என்றார் பாலாஜி.
திகைத்து நின்ற ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி...அந்தப் படம் தான் "பில்லா". வசூலை வாரிக் குவித்து இந்தியத் திரை உலகில் ரஜினி பெருமளவில் பேசப்பட்டார்.
இதற்கிடையே ரஜினியின் வளர்ச்சி தமிழகத்தில் மிகப் பெருமளவில் பேசப்பட்டதோடு ரசிகர்களின் ஆதரவும் பெருகியது.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கு இது பெருமளவில் உறுத்தலாக உருவாகியது. மக்கள் செல்வாக்குடன் திரையுலகில் முடி சூடா மன்னனாகவும் இருந்து வந்த எம்ஜிஆர் தனக்கு போட்டியாக ரஜினியை எண்ணத் தொடங்கினார். இதுவே எம்ஜிஆர் தனது பலத்தை சிறிது இழக்கக் காரணமாக இருந்தது.
சென்னை அண்ணா சாலையில் ரஜினிகாந்த்துக்கு 100 அடி அளவிற்கு "கட்-அவுட்" வைக்கப்பட்டிருந்தது. அது அந்த வழியாகச் சென்ற எம்.ஜி.ஆருக்கு உறுத்தியது. தன்னுடன் நடித்த ஒரு நடிகை ஒருவரை ரஜினிகாந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் அறிந்து எம்ஜிஆர் கொதித்துப் போனார்.
மேலும், பில்லா படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஸ்ரீப்ரியா கேரக்டரில் நடிப்பதாகவும் இருந்தது.
இது போன்ற செய்திகளால் ரஜினிகாந்துக்கு எம்ஜிஆர் மறைமுகமாகத் தொந்தரவு கொடுக்கத் தொடங்கினார் என்று ரஜினிகாந்த் நட்பு வட்டாரங்களில் இதைச் சொல்லி வேதனைப் பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகின.
இதைப் புரிந்து கொண்ட அன்றைய கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர் மீது தனக்கு இருந்த கோபத்தை ரஜினிக்கு எழுதிய பாடல்கள் மூலம் தீர்த்துக் கொண்டதாகவும் அன்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.
பொல்லாதவன் படத்தில்
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன?
தள்ளாடும் பேதை பெண்ணே,
வெள்ளாடு வேங்கை அல்ல
நானே என்றும் ராஜா
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை
பெண்ணா என்னை வெல்ல கூடும்
என்று அந்தப் பாடலில் எம்ஜிஆரை கண்ணதாசன் சாடை பேசியதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதைப்போலவே பில்லா படத்தில் நாட்டுக்குள்ள எனக்கு ஒரு பெயர் உண்டு என்ற பாடலை எழுதி பட்டி தொட்டி எங்கும் ரஜினிகாந்தைத் தூக்கிப் பிடித்தார் கவிஞர் கண்ணதாசன்.
இதெல்லாம் எம்ஜிஆருக்கு ரஜினிகாந்த் மீது கோபம் ஏற்படக் காரணமாக இருந்தது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் "லேம்ப்ரட்டா" ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வந்த ரஜினிகாந்தை மடக்கிப் பிடித்தனர் காவல்துறையினர். ரஜினிகாந்த் ஸ்கூட்டரில் கஞ்சா வைத்திருந்ததாகக்கூறி ரஜினியைக் கைது செய்தனர் என்று அப்போது செய்தித் தாளில் செய்தி வெளியாகியது.
ஆனால், அது கஞ்சா வழக்கு அல்ல, ஜெயமணி எனும் திரைத்துறைப் பத்திரிகையாளர் என்பவருடன் ஏற்பட்ட சிறு மோதலில் ஜெயமணி கொடுத்த புகாரின்பேரில் 1979 மார்ச் மாதம் 7 ம் தேதி ரஜினி கைது செய்யப்பட்டு மாலை வரை காவல்நிலையத்தில் இருக்க வைத்து பிறகு சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது.
ஆக, பிரபலங்கள் மோதிக்கொண்டால் சுவையான தகவல்கள் பல வெளிவரும்தானே. எம்ஜிஆரோடு இணைத்துப் பேசுமளவுக்கு ரஜினி வளர்ந்து இருந்தார் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று.
இந்த நிகழ்வு அப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு நின்றுகொண்டு ரஜினிகாந்த், எம்ஜிஆருக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், அருகே இருந்த சோடாக் கடையில் ஒரு சோடா பாட்டிலை எடுத்து அதிமுக அலுவலகத்தின் மீது வீசி நான் இங்கதான் நிக்கிறேன் தைரியம் இருந்தா என்கிட்ட மோது எனக் கூறி சவால் விட்டார் என்றும் கூறப்பட்டது.
தொடக்கத்திலிருந்து ரஜினிகாந்த் இயற்கையிலேயே துணிச்சலும், தைரியமும் கொண்டிருந்தார் என்பதை இதுபோன்ற தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர் - ரஜினிகாந்த் இடையே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தவர் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன்.
ரஜினியும் தேங்காய் சீனிவாசனும் திரையுலகில் மிக மிக நெருக்கமான நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
தேங்காய் சீனிவாசனுக்கு மட்டும் ரஜினி தனது 36 படங்களில் வாய்ப்பு கொடுத்து அவர் வளர்ச்சிக்கும் உதவினார் என்பது குறித்து அடுத்த பதிவில் விரிவாக காண்போம்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)