லஞ்ச ஒழிப்புத் தனிப்பிரிவு தொடங்கும் அரசு; ‘வசூல் ராஜா’வுக்கு முக்கியப் பணியா? பருந்தார் தகவல்கள்
சென்னை காவல்துறையில் ஊழல் ஒழிப்புத் தனிப்பிரிவு, லஞ்சப் புகாருக்கான எண், சர்ச்சைக்குரிய காவல் அதிகாரியின் பணியிட மாற்றம், செய்தியாளர்களுக்கான அரசு அங்கீகார அட்டைகள் உள்ளிட்ட பருந்தார் தகவல்கள்.
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
விசிலடித்தபடியே அலுவலக அறைக்குள் வந்தமர்ந்தார் பருந்தார்.
அலுவலகம் வந்திருந்த வேறு ஒருவர்....என்ன தவெகவில் சேர்ந்துட்டீங்களா என்று சிரித்தபடியே பருந்தாரைப் பார்த்துக் கேட்க...
அது என்னங்க நம்ம ஊர்ல இப்படி ஒரு வியாதி. யாராவது ஏதாவது ஒரு கட்சில சேர்ந்துட்டே இருக்கனுமா.....?? கட்சில சேராம இருக்கவே முடியாதா....? தமிழ்நாட்டுல மொத்தமாவே சுமார் 7 கோடியே 50 லட்சம் மக்கள் வாழறோம். இதுல வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சம் பேர். அரசியல் கட்சி உறுப்பினர்கள்னு பார்த்தா எப்படி எண்ணிப் பார்த்தாலும் எல்லாக் கட்சித் தொண்டர்களை எண்ணினாலும் மொத்தம் 3 கோடிப் பேர் இருக்கலாம். இதுல எங்களைப் போன்ற ஆட்களையாவது கம்முனு விடுங்களேம்பா.....நாங்களாவது எந்தக் கட்சியும் இல்லாம நிம்மதியா இருந்துட்டுப் போறோம் என்று நமக்கும் சேர்த்து கவுண்டமணி பாணியில் பதில் அளித்தார் பருந்தார்.
கேட்டவர் சிரித்தபடியே வெளியே சென்றார்.
நம்மை நோக்கித் திரும்பிய பருந்தார்...."தமிழ் நாடு அரசின் பல துறைகளில் லஞ்சம் வாங்கப் பணியாளர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அச்சப்படுகிறார்கள். இது மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜயைப் பொறுத்தவரையில்
காவல்துறையில் இதனை முழுமையாக அமல்படுத்த தீவிரமாக இருக்கிறாராம். இதன் ஒரு கட்டமாகவே காவல்துறையில் யாரவது லஞ்சம் கேட்டால் "78717-23000" எனும் அலைபேசிக்கு நேரடியாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாகவோ புகார் அனுப்பலாம் என்று கூறி சென்னை பெருநகரக் காவல் துறையில் "ஊழல் ஒழிப்புத் தனிப் பிரிவு" தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்".
ஆமாம் பார்த்தோம், நல்ல முயற்சி பாராட்டுவோம் என்றோம்.
நீங்க பாராட்டுறீங்க...ஆனா, டிபார்ட்மென்ட்ல சிலர் கன்பியூஸ் ஆகியிருக்காங்க என்று கொக்கி போட்டார் பருந்தார்.
புரியலை பருந்தாரே என்றோம்.
2026 சட்டமன்றத் தேர்தல் நடந்தப்போ தேர்தல் ஆணையம் நியமித்திருந்த மாநகரக் காவல் ஆணையர், அப்போ ஆயுதப்படையில் இருந்த ஒரு வசூல் ராஜாவை பணியிடை நீக்கம் செய்தார் நினைவிருக்கா என்று கேள்வி எழுப்பினார் பருந்தார்.
ஆமாம், சென்னை புழல் சிறையிலிருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது கைதிகளுக்கு சலுகைகள் காட்டுவதற்கு லஞ்சம் வாங்கிய புகாரில் மொத்தம் மூனு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாங்க.
ஆமாம், அந்த மூனு பேரில் ஒருவர் ஆய்வாளர். கல்லில் நார் உரிப்பதில் வல்லவர் என்று காவல்துறையிலேயே பேசிக்கொள்கிறார்கள். அதாவது ஆயுதப்படையில் இருந்துகொண்டே சில்லறை பார்ப்பதில் வல்லவராம் அவர்.
ஓ...பேஷ் பேஷ் அப்புறம்.
கைதிகளை நீதிமன்றங்களுக்கு ஆயுதப்படையினர்தான் அழைத்துச் சென்று வருவார்கள். அதில்தான் காசு பார்த்திருக்கிறார் இவர்.
ஓ....
ஆட்சி மாறியதும் அவர் ஆயுதப்படையில் இருந்து சென்னையில் கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் அந்த விவிஐபி காவல்நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டாராம்.
ஆட்சி மாறியதும் காட்சி மாறியதோ என்றோம்.
ஆமாம், அப்படியே விட்டிருந்தால் யாரும் குழம்பியிருக்க மாட்டார்கள். அதற்குப் பிறகு அவரை சென்னையின் வடக்கில் பணம் கொழிக்கும் ஒரு இடத்துக்குப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறாராம்.
பணம் கொழிக்கும்...போக்குவரத்து....வடக்கு....ஓ...கன்டெய்னர் ஏரியாவா என்று புதிருக்கு விடை கண்டுபித்த சிறுவர் போல கேட்டோம்.
கககபோ என்று பாராட்டிவிட்டு...ஆமாம் அங்குதான். மாதம்தோறும் 25 லகரம் புழங்கும் ஏரியா என்று கூறிய பருந்தார் அடுத்த தலைப்புக்குத் தாவினார்.
செய்தியாளர்களுக்கான அரசு அங்கீகார அடையாள அட்டைகளைப் (Government Accredited Journalists Card ) புதுப்பிக்காமல் நிறுத்தி வச்சிருந்தாங்க போன திமுக அரசாங்கத்துல.
ஆமாம்...நாம செய்தி போட்டிருந்தோமே.
உங்க தமிழ் ஊடகம் செய்தி தமிழ்நாட்டின் 100 க்கு 95 விழுக்காடு செய்தியாளர்களுக்குப் போய்ச் சேர்ந்துடுச்சு. அந்த செய்திப்படி, Press Pass அதாவது வார இதழ், மாத இதழ்களுக்குக்கான புதுப்பித்த "அரசு அடையாள அட்டை" மட்டும் இப்போ தர்ராங்க. நாளிதழ்களுக்கான (புதுப்பிப்பு) அட்டை குறித்துப் பரிசீலனை நடந்துட்டு இருக்காம். நீதிமன்ற உத்தரவு புதிய அட்டைகளுக்குப் பொருந்தும் வகையில் அரசாணையில் திருத்தம் கொண்டு வருவதாகவும் தகவல் என்ற பருந்தாரிடம். "வழக்கு, சிறை....இதெல்லாம் எனக்கு சாதாரணமப்பான்னு சொன்ன மீசைக்கார பத்திரிகையாளருக்கு ஆதரவா சீமான் குரல் கொடுத்திருக்காரே என்று கேட்டோம்.
ஆமாம், சீமானை யாரெல்லாம் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்களோ அவர்களை அண்ணன், தம்பி, சகோதரன், அப்பான்னு அவர் கட்டிபுடிச்சுக் கொண்டாடுவார்னு ஊருக்கே தெரிஞ்சதுதானே. அதிலும் திமுக ஆதரவாளர்கள்னா சொல்லவா வேணும், "பங்காளிகள்தானே". அவரை நம்பி யாரையாவது பகைச்சுக்கிட்டா அப்புறம் நடுத் தெருவுல நிக்க வேண்டியதுதான். காரைக்குடில வேட்பாளர் பிரபுவை முதல்நாள்தான் சாட்டை காணொலி போட்டு வெளுத்து வாங்கினார். அடுத்தநாள் அவர் முன்னாடியே பிரபுவை கட்டிப்புடிச்சுக்கிட்டார் சீமான். அது போலத்தான் இதுவும். அவன் எங்க குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசுவான்...நான் அவன் குடும்பத்தை ரொம்ப ரொம்பக் கேவலமா பேசுவேன் போல என்ற பருந்தார், சீமானை விடுங்க...நீங்க சொன்ன மீசையை முறுக்கி வீர வசனம் பேசின பத்திரிகையாளர் வழக்குப் பதிவு செஞ்சவுடனே டரியல் ஆயிட்டாராம். பல இடங்களில் போய் கெஞ்சிக் கூத்தடியிருக்கார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்திடம் சொல்லி அறிக்கை விடச் சொல்லியிருக்கார். அப்புறம் எதுவும் வேலைக்கு ஆகாம முன்பிணை வாங்கி சைபர் குற்றக் காவல் நிலையத்தில் அடுத்த உத்தரவு வரும் வரையில் கையெழுத்துப் போட்டுட்டு இருக்கார்.
சட்டமன்றச் செய்திகள் ஒன்றுமில்லையா என்று கேட்டோம்.
இல்லாமல் என்ன....நாளை தருகிறேன். ரொம்ப நீஈஈளமா எழுதினா படிக்க முடியலைன்னு என்னிடமே சிலர் சொல்றாங்க, அதனால இன்னைக்கு இது போதும் என்று சொல்லி "விர்"ரெனப் பறந்துவிட்டார் பருந்தார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)