புதிய தமிழ்த்தேசியக் கட்சி தொடங்கும் மு.களஞ்சியம்! நாம் தமிழருக்கு முன்பே தொடங்கிய அரசியல் பயணம்
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் புதிய தமிழ்த்தேசியக் கட்சி தொடங்குகிறார். பொதுவுடைமைப் பின்னணி, ஈழத் தமிழர் பணிகள், திரைப்படப் பயணம், சீமானுடனான அரசியல் உறவு முதல் புதிய கட்சி வரை அவரது பின்னணி என்ன?
திரைப்பட இயக்குநர் - நடிகர் - போராட்டக்காரர் - ஈழத் தமிழர் நலப் பணிகளில் ஈடுபட்டவர் - தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் - நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இயக்குநர் களஞ்சியம், இப்போது — தனக்கான தனித்த தமிழ்த்தேசிய அரசியல் பாதையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2026 ஜூலை 18 அன்று நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மு.களஞ்சியம், தனது அரசியல் பயணம் தமிழ்த்தேசியக் களத்தில் தொடரும் என்று அறிவித்திருந்தார். தனது அரசியல் புரிதலும் தமிழ்த்தேசியத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளும் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய போக்கிலிருந்து மாறுபடுவதாக அவர் விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அதன் அடுத்தகட்டமாக இப்போது புதிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார்.
ஆனால்—
யார் இந்த மு.களஞ்சியம்?
அவருடைய அரசியல் வாழ்க்கை நாம் தமிழர் கட்சியில் தொடங்கியதா?
இல்லை.
அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பொதுவுடைமை அரசியல், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழரசனுடனான தொடர்பு, தேசிய இன அரசியல், ஈழத் தமிழர் முகாம்கள், தமிழக உரிமைப் போராட்டங்கள் என்று நீள்கிறது அவரது பின்னணி.
அதை ஆரம்பத்திலிருந்து பார்ப்போம்.
பொதுவுடைமைக் குடும்பத்தில் தொடங்கிய பயணம்
தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் மு.களஞ்சியம்.
களஞ்சியத்தின் தந்தை லெ.முனியாண்டி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஆதிலட்சுமி, பர்மாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்துடன் பயணித்து பின்னர் நாடு கடத்தப்பட்ட சங்கிலி கருப்பனின் மூத்த மகள். லெ.முனியாண்டி–ஆதிலட்சுமி இணையரின் ஒரே மகனாகப் பிறந்தவர் மு.களஞ்சியம்.
தந்தை முனியாண்டி பொதுவுடைமைச் சிந்தனையாளர். இதனால் சிறுவயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் பழகுவதற்கான அரசியல் சூழல் களஞ்சியத்துக்கு உருவானது.
அதுதான் பின்னாளில் அவரது அரசியல் வாழ்க்கைக்கான முதல் அடித்தளமாகவும் அமைந்தது.
பள்ளிப் பருவத்திலேயே புரட்சிப் பண்பாட்டு இயக்கம்
ஆம்பலாப்பட்டு இழுப்பைத்தோப்பு பகுதியில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார் களஞ்சியம்.
அந்தக் காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் யுத்தக் குழுவின் கலாச்சாரப் பிரிவாகச் செயல்பட்ட “புரட்சிப் பண்பாட்டு இயக்கம்” அவரை ஈர்த்தது.
அதில் தன்னை இணைத்துக்கொண்ட களஞ்சியம், மாணவப் பருவத்திலேயே தீவிர பொதுவுடைமைச் சிந்தனைகளுக்குள் சென்றதாக தனது அரசியல் வளர்ச்சியை விவரிக்கிறார்.
ஆனால் வெறும் கோட்பாட்டு அரசியலுடன் அது நின்றுவிடவில்லை.
அவரை முதலில் பெரிய போராட்டக் களத்திற்கு அழைத்துச் சென்ற பிரச்சினைகளில் ஒன்று ஈழத் தமிழர் பிரச்சினை.
1985 — 2,000 மாணவர்களுடன் 7 கிலோ மீட்டர் நடை!
1980-களின் மத்தியில் இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன.
அப்போது பள்ளி மாணவர் தலைவராக இருந்த களஞ்சியம், 1985 காலகட்டத்தில் இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களைக் கண்டித்து பள்ளி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார்.
சுமார் 2,000 பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் நடைப் பயணம் செய்து தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை சாலைக்குச் சென்று மிகப்பெரிய பேருந்து மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார் மு.களஞ்சியம்.
அந்தக் காலத்திலிருந்தே ஈழத் தமிழர் பிரச்சினை அவரது அரசியல் நடவடிக்கைகளில் இடம்பெற்றது என்பது பின்னாளில் அவரது தொடர்ச்சியான செயல்பாடுகளிலும் தெரிகிறது.
வேதாரண்யம் – கோடியக்கரைக்கு வந்த ஈழத் தமிழர்கள்
இலங்கையின் போர்ச்சூழலிலிருந்து தப்பித் தமிழகக் கடற்கரைக்கு வந்த ஈழத் தமிழர்களுக்கும் களஞ்சியம் தொடர் உதவிகள் செய்திருக்கிறார்.
தனது வகுப்புத் தோழரான காமராஜ் — பின்னாளில் “தடா காமராஜ்” என்று அறியப்பட்டவர் — உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரைப் பகுதிகளுக்கு வந்த ஈழத் தமிழர்களுக்குத் தங்குமிடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்தவர் களஞ்சியம்.
அதாவது,
ஈழம் என்பது களஞ்சியத்தின் அரசியலில் நாம் தமிழர் கட்சிக்குப் பிறகு வந்த விவகாரம் அல்ல; பள்ளி மாணவர் பருவத்திலிருந்தே தனது அரசியல் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
மன்னர் சரபோஜி கல்லூரி — தமிழரசன் சந்திப்பு!
பள்ளிப்படிப்புக்குப் பின்னர் தஞ்சாவூரில் உள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்தார் களஞ்சியம். அதேநேரத்தில் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் தஞ்சை மாவட்டப் பொறுப்பிலும் தீவிரமாக இயங்கியதாகக் கூறுகிறார்.
அந்தக் காலகட்டத்தில்தான் அவரது அரசியல் பார்வையை மாற்றியதாக அவர் குறிப்பிடும் முக்கியமான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
தோழர் தமிழரசனைச் சந்தித்தார்.
தான் தங்கியிருந்த மாணவர் விடுதிக்கு தமிழரசன் அடிக்கடி வந்து தங்கிச் செல்வார் என்று களஞ்சியம் நினைவுகூர்கிறார்.
அந்த உரையாடல்கள்தான் பொதுவுடைமை அரசியலிலிருந்து “தேசிய இனச் சிக்கல்” குறித்த விவாதத்தை நோக்கித் தன்னை அழைத்துச் சென்றதாக அவர் கூறுகிறார். இந்தியா பல மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்ட நாடு, தேசிய இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி போன்ற கருத்துகள் தொடர்பான அரசியல் புரிதல் அப்போதுதான் தனக்கு ஆழமாக ஏற்பட்டதாக களஞ்சியம் விவரிக்கிறார்.
அதுவரை பொதுவுடைமை அரசியலை முதன்மையாகக் கொண்டிருந்த அவரது சிந்தனையில் தேசிய இன விடுதலை அரசியல் இணைந்த முக்கியமான காலகட்டமாக இதைக் குறிப்பிடுகிறார்.
இதன் தொடர்ச்சியாக மாணவர் பருவத்திலேயே ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்கள் மட்டுமின்றி, விவசாயிகள் தொடர்பான போராட்டங்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டதாகக் கூறுகிறார் மு.களஞ்சியம்.
கல்லூரியிலிருந்து கப்பல் பொறியியல்!
இதற்குப் பிறகு அவரது வாழ்க்கை எதிர்பாராத மற்றொரு பாதைக்குத் திரும்பியது.
Marine Engineering — கப்பல் பொறியியல் பயின்றதாகவும், சுமார் ஐந்து ஆண்டுகள் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றிவிட்டு பிறகு அந்தப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சென்னை வந்தார்.
அங்குதான்—
சினிமா அவரது அடுத்த அடையாளமாகிறது.
திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம்
திரைப்படத்துறைக்குள் நுழைந்த களஞ்சியம் இயக்குநராகப் பல திரைப்படங்களை உருவாக்கினார்.
பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காளி, முந்திரிக்காடு உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் வெளிவந்தவை.
திரைப்படங்களை இயக்குவதோடு நடிகராகவும் பணியாற்றிய களஞ்சியம், களவுத் தொழிற்சாலை, கதிரவனின் கோடை மழை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் திரைப்படத்துறை அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
மாறாக, அடுத்த கட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினைக்குள் அவர் இன்னும் தீவிரமாகச் சென்றதாக அவரது வாழ்க்கைக் குறிப்பு காட்டுகிறது.
வெளிநாட்டு ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல... தமிழக முகாம்களில் இருப்பவர்கள்?
ஈழத் தமிழர் பிரச்சினை பேசப்பட்டபோது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கள் குறித்து அதிகம் பேசப்பட்டதாகவும், அதேநேரத்தில் தமிழ்நாட்டின் ஈழத் தமிழர் முகாம்களில் வாழ்ந்த மக்களின் நிலை என்ன? என்ற கேள்வி தன்னைத் துரத்தியதாகவும் களஞ்சியம் கூறுகிறார்.
இதனால் தமிழகத்திலிருந்த முகாம்களை நேரடியாகச் சென்று பார்க்கத் தொடங்கினார்.
புழல்.
கும்மிடிப்பூண்டி.
அதன்பிறகு ஒவ்வொரு முகாமாகச் செல்ல ஆரம்பித்ததாக அவர் கூறுகிறார்.
இந்தப் பயணத்தின் ஒருகட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டியில் வைத்து மறுவாழ்வுத் துறை அதிகாரிகளால் தான் தடுத்து விசாரிக்கப்பட்டதாகவும் களஞ்சியம் கூறுகிறார்.
அங்கிருந்துதான் பிறந்ததா “தமிழர் நலப் பேரியக்கம்”?
தன்னை மறுவாழ்வுத் துறையினர் கடுமையாக விசாரித்ததாகவும், பின்னர் அன்றைய உயர் அதிகாரியாக இருந்த தேசபந்து ஐஏஎஸ் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில் முறைப்படியான அமைப்பின் மூலம் செயல்பட முடிவு செய்ததாகவும் களஞ்சியம் கூறுகிறார்.
அதன்பின்னர்தான்,
“தமிழர் நலப் பேரியக்கம்”
என்ற அமைப்பைத் தொடங்கியதாக அவர் விவரிக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்ததாக அவர் குறிப்பிடும் 110 ஈழத் தமிழர் முகாம்களுக்கும் அரசின் அனுமதியுடன் பயணித்து அங்கிருந்த மக்களின் வாழ்நிலையை நேரடியாகப் பார்த்ததாக களஞ்சியம் கூறுகிறார்.
அந்த முகாம்களில் குழந்தைகள் எதிர்கொண்ட கல்வி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் கூறுகிறார்.
200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி?
முகாம்களில் வாழ்ந்த குழந்தைகளை,
“அறிவாயுதம் ஏந்திய பிள்ளைகளாக மாற்ற வேண்டும்”
என்ற எண்ணத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக களஞ்சியம் கூறுகிறார்.
அவரது தகவலின்படி, ஈழத் தமிழர் முகாம்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பைத் தொடர உதவி செய்துள்ளார்.
அதேபோல இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவிக்காக தமிழகம் வந்தவர்களுக்கும் பல்வேறு மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்துள்ளார் களஞ்சியம்.
2018 காவிரி உரிமைப் போராட்டம், 2019 ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள், 2021 முல்லைப் பெரியாறு போராட்டம் உள்ளிட்டவற்றில் “தமிழர் நலப் பேரியக்கம்" சார்பில் களஞ்சியத்தின் பங்கேற்பு இருந்தது.
ஈழத்தைத் தாண்டி தமிழக உரிமைப் போராட்டங்கள்
தமிழர் நலப் பேரியக்கத்தின் செயல்பாடுகளை ஈழத் தமிழர் பிரச்சினையுடன் மட்டும் நிறுத்தவில்லை களஞ்சியம்.
காவிரி நதிநீர் உரிமை, முல்லைப் பெரியாறு, ஏழு தமிழர் விடுதலை போன்ற பிரச்சினைகளில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
ஏழு தமிழர் விடுதலை தொடர்பான 2016 நிகழ்விலும் தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம் கருத்துரை வழங்கினார்.
காவிரி உரிமைக்காக 2018-ல் பல தமிழ்த்தேசிய மற்றும் தமிழக அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டத்திலும், முல்லைப் பெரியாறு அணை உரிமை தொடர்பான 2021 போராட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார் களஞ்சியம்.
இதைத்தவிர,
ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலைய எதிர்ப்பு, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டம், கதிராமங்கலம் மீத்தேன் எதிர்ப்பு, அனிதாவின் மரணத்திற்குப் பிறகான நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் உள்ளிட்ட பல களங்களிலும் களஞ்சியம் செயல்பட்டார்.
இதனால் திரைப்பட இயக்குநர் என்ற அடையாளத்திற்கு இணையாக தமிழக உரிமை அரசியலிலும் அவரது செயல்பாடுகள் விரிவடைந்தன.
அப்போதுதான் வளர்கிறது நாம் தமிழர் கட்சி!
ஒருபுறம் தமிழர் நலப் பேரியக்கம்.
மறுபுறம் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி.
இரண்டு அமைப்புகளுமே தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்தாலும் ஆரம்பத்திலேயே களஞ்சியமும் சீமானும் நண்பர்களாக இருக்கவில்லை என்கிறார் களஞ்சியம்.
மாறாக, ஈழத் தமிழர் தொடர்பான தனது செயல்பாடுகள் குறித்த விவகாரத்தில் இருவருக்கும் முதலில் முரண்பாடும் மோதல் போக்கும் இருந்ததாக அவர் கூறுகிறார்.
அந்தக் காலத்தில் சீமான் தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாகக் களஞ்சியம் கூறுகிறார்.
ஆனால் பின்னர் நடந்த ஒரு நிகழ்வு இருவரின் உறவையே மாற்றியதாகக் களஞ்சியம் கூறுகிறார்.
முள்ளிவாய்க்கால் முற்றம் — எதிரெதிர் திசையிலிருந்தவர்கள் சந்தித்த தருணம்!
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு நிகழ்வு நடைபெற்ற காலகட்டம்.
மா.நடராஜன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் முன்னெடுத்த அந்த நிகழ்வில் திரைப்படத் துறையினர் பேசும் பிரிவில் களஞ்சியமும் உரையாற்றியதாக அவர் கூறுகிறார்.
நிகழ்வை இயக்குநர் வ.கௌதமன் ஒருங்கிணைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.
தனக்கு வழங்கப்பட்ட ஐந்து நிமிடங்களில் வேகமாக உரையாற்றிவிட்டு மேடையில் அமர்ந்திருந்தபோது, அடுத்து உரையாற்றுவதற்காக முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமான் தன்னிடம் வந்து அமர்ந்ததாக களஞ்சியம் நினைவுகூர்கிறார்.
அந்தச் சந்திப்பைப் பற்றி களஞ்சியம் கூறும் தகவல் முக்கியமானது.
தனது பேச்சை முதன்முறையாக நேரில் கேட்டதாகவும், பேச்சு தனித்துவமாக இருந்ததாகவும் சீமான் பாராட்டியதாகக் கூறுகிறார்.
அதன்பிறகுதான் அரசியல் இணைப்பு குறித்த பேச்சு தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார்.
இருவரும் தமிழ்த்தேசிய அரசியல் பேசும்போது ஏன் தனித்தனியாக இயங்க வேண்டும்; இணைந்து செயல்படலாமே என்ற கருத்தை சீமான் முன்வைத்ததாக களஞ்சியம் நினைவுகூர்கிறார்.
அதற்கு உடனடியாக முடிவெடுக்காமல் சென்னையில் பேசிக்கொள்ளலாம் என்று பதிலளித்ததாகவும் கூறுகிறார்.
வன்னியரசு எடுத்த முயற்சி
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இன்றய தமிழ்நாடு அமைச்சராக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு அப்போது தனது அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்து சீமானுடன் இணைந்து அரசியல் செய்வது குறித்து வலியுறுத்தியதாக களஞ்சியம் கூறுகிறார்.
அப்போது களஞ்சியம் தனது “முந்திரிக்காடு” திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அந்தப் படத்தில் வரும் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் சீமான் நடிக்க வேண்டும் என்று வன்னியரசு விரும்பியதாகவும், அதற்காக சீமானைச் சந்திக்கத் தன்னை அழைத்துச் சென்றதாகவும் களஞ்சியம் விவரிக்கிறார்.
களஞ்சியத்தைப் பொறுத்தவரை அது ஒரு திரைப்படம் தொடர்பான சந்திப்பு.
ஆனால் சந்திப்பு வேறு திசைக்குச் சென்றது.
“ஆர்.கே.நகர் பரப்புரைக்கு என்னோடு வாருங்கள்!”
சீமானிடம் முந்திரிக்காடு திரைப்படத்தில் நடிப்பது குறித்துப் பேசுவதற்காகத்தான் சென்றதாக களஞ்சியம் கூறுகிறார்.
ஆனால் அந்த உரையாடலில் அரசியல் மீண்டும் உள்ளே வந்தது.
2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் தன்னுடன் இருக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டதாக களஞ்சியம் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சிக்காக ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அதுவே சீமான்–களஞ்சியம் அரசியல் உறவு உறுதியடைந்த முக்கியமான கட்டங்களில் ஒன்றாக மாறியது.
களஞ்சியம் 2026-ல் எழுதிய விலகல் கடிதத்தில், 2016 முதல் சீமானுடன் இணைந்து களப்பணி, தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் செயல்பட்டதாக அவரே பதிவு செய்திருக்கிறார்.
அதன்பிறகு பல ஆண்டுகள் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாக முகங்களில் ஒருவராக அவர் செயல்பட்டார்.
தமிழர் நலப் பேரியக்கமும் நாம் தமிழரும்
நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து செயல்பட்ட காலத்திலும் தமிழர் நலப் பேரியக்கம் என்ற அவரது அடையாளம் முற்றிலும் மறைந்துவிடவில்லை.
2018-ல் காவிரி தொடர்பான கூட்டுப் போராட்ட அறிவிப்பில் தமிழர் நலப் பேரியக்கத் தலைவராகவே அவர் குறிப்பிடப்படுகிறார்.
2021 முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் அதே அடையாளத்துடன் பங்கேற்றிருக்கிறார்.
2023-ல்கூட நாம் தமிழர் கட்சியின் மதுராந்தகம் தொடர்பான அதிகாரப்பூர்வ பதிவில் “தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் திரு. மு.களஞ்சியம்” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவரது அரசியல் பாதையை வெறுமனே,
“சினிமாவிலிருந்து நாம் தமிழருக்கு வந்தவர்”
என்று சுருக்க இயலாது.
பொதுவுடைமை அரசியல் → தேசிய இன அரசியல் → ஈழத் தமிழர் நலப்பணி → தமிழர் நலப் பேரியக்கம் → தமிழக உரிமைப் போராட்டங்கள் → நாம் தமிழர் கட்சி என்று பல்வேறு கட்டங்களைக் கொண்ட பயணம் அது.
பிறகு ஏன் நாம் தமிழரிலிருந்து வெளியேறினார்?
சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2026 ஜூலை 18 அன்று நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக மு.களஞ்சியம் அறிவித்தார்.
அப்போது அவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பில் இருந்துள்ளார்.
விலகலுக்கான காரணங்களையும் அவர் வெளிப்படையாகக் கூறினார்.
கட்சியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், மாற்றுக் கருத்துடைய அரசியல் தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் மீதான விமர்சனங்களின் தரம் ஆகியவை தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக் கொள்கை வெறுப்பரசியலைக் கடந்ததாக இருக்க வேண்டும்; விமர்சனம் கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர தனிநபர் தாக்குதலாக மாறக்கூடாது என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.
அதேநேரத்தில் சீமான் மீதான தனிப்பட்ட மரியாதை தொடரும் என்றும் அவர் தனது விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் அவரது விலகலை வெறும் தனிப்பட்ட சீமான்–களஞ்சியம் மோதலாக மட்டும் பார்க்க முடியாது.
களஞ்சியம் தனது கடிதத்தில் முன்வைத்த விளக்கத்தின்படி, அது தமிழ்த்தேசிய அரசியலை எந்தப் பாதையில் முன்னெடுக்க வேண்டும் என்ற அரசியல் அணுகுமுறை தொடர்பான கருத்து வேறுபாடு.
இப்போது தனிக்கட்சி — களஞ்சியத்தின் அரசியல் வட்டம் முழுமையடைகிறதா?
இப்போது மு.களஞ்சியம் மீண்டும் ஒரு திருப்புமுனையில் நிற்கிறார்.
பொதுவுடைமைக் குடும்பப் பின்னணி...
புரட்சிப் பண்பாட்டு இயக்கம்...
மாணவர் போராட்டங்கள்...
ஈழத் தமிழர்களுக்கான ஆரம்பகால உதவிகள்...
தமிழரசனுடனான தொடர்பு...
தேசிய இன அரசியல்...
கப்பல் பொறியியல்...
திரைப்படத்துறை...
ஈழத் தமிழர் முகாம்கள்...
தமிழர் நலப் பேரியக்கம்...
காவிரி முதல் நீட் வரையிலான தமிழக உரிமைப் போராட்டங்கள்...
சீமானுடனான ஆரம்பகால முரண்பாடு...
பின்னர் ஏற்பட்ட அரசியல் இணைப்பு...
ஆர்.கே.நகர் பரப்புரை...
நாம் தமிழர் கட்சியில் சுமார் பத்தாண்டுப் பயணம்...
அங்கிருந்து கருத்து வேறுபாட்டால் வெளியேற்றம்...
இப்போது தனியான தமிழ்த்தேசிய அரசியல் கட்சி.
இந்த நீண்ட பின்னணியுடன்தான் மு.களஞ்சியத்தின் புதிய அரசியல் முயற்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அவர் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் என்ன? அதன் கொள்கை என்ன? பொதுவுடைமைச் சிந்தனையையும் தமிழ்த்தேசியத்தையும் எவ்வாறு இணைக்கப்போகிறார்? சாதி, மதம், சமூகநீதி, மாநில உரிமை, பொருளாதாரம், ஈழத் தமிழர் பிரச்சினை ஆகியவற்றில் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார்? நாம் தமிழர் கட்சியிலிருந்து அவரது புதிய அரசியல் அமைப்பு கொள்கை மற்றும் நடைமுறையில் எவ்வாறு வேறுபடப்போகிறது?
இவற்றுக்கான பதில்கள்தான் அடுத்தகட்டத்தில் முக்கியமானவை.
மு.களஞ்சியத்தின் புதிய கட்சி தமிழ்நாட்டின் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பில் எத்தகைய இடத்தை உருவாக்குகிறது என்பதை அதன் கொள்கை, அமைப்பு மற்றும் அடுத்தடுத்த செயல்பாடுகள்தான் உணர்த்தும்.
What's Your Reaction?
Like
5
Dislike
0
Love
2
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)