மேக்கேதாட்டு அணை: காவிரியில் கர்நாடகத்தின் அடுத்த அணையால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

மேக்கேதாட்டுவில் 67.16 TMC கொள்ளளவு அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுகிறது. காவிரி நீர்வரத்து, மேட்டூர் அணை, குறுவை சாகுபடி மற்றும் டெல்டா விவசாயத்திற்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று அலசுகிறது இந்தக் கட்டுரை.

Aug 20, 2026 - 14:00
Updated: 27 days ago
0 8
மேக்கேதாட்டு அணை: காவிரியில் கர்நாடகத்தின் அடுத்த அணையால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

தமிழ் ஊடகம் சிறப்புக் கட்டுரை

காவிரி நீர்ப் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை முன்னெடுத்தே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கர்நாடகம் தீவிரம் காட்டி வருகிறது.

கர்நாடகா தமது வாதப்படி, மழைக்காலத்தில் கிடைக்கும் கூடுதல் நீரை மேக்கேதாட்டுவில் சேமித்து பெங்களூரின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதுடன் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும், தமிழ்நாட்டுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரைத் தொடர்ந்து வழங்கவும் முடியும் என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகிறது.

ஆனால் தமிழ்நாட்டின் அச்சம் வேறு.

“காவிரி தமிழ்நாட்டில் பல லட்சம் ஏக்கர் பாசனத்தின் உயிர்நாடியாக உள்ளது. வரலாற்று தீர்ப்பாயப் பதிவுகளில் தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்படுகைப் பாசனப் பரப்பு சுமார் 28.2 லட்சம் ஏக்கர் வரை பதிவாகியுள்ளது.

காவிரி டெல்டாவில் மட்டும் சுமார் 9.34 லட்சம் ஏக்கர் நிகரப் பாசனப் பரப்பு உள்ளது.

இதுதவிர காவிரியை ஆதாரமாகக் கொண்ட பல நகரங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பெருமளவிலான மக்கள் குடிநீரையும் சார்ந்துள்ளனர்.”

மேக்கேதாட்டு திட்டம் எவ்வளவு பெரியது?

கர்நாடகம் முன்வைத்த திட்டத்தின்படி, மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே சுமார் 67.16 TMC மொத்த கொள்ளளவுள்ள நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 59.46 TMC live storage இருக்கும்.

பெங்களூரின் குடிநீர்த் தேவை மற்றும் மின் உற்பத்தி ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகின்றன.

காவிரி நீர்ப் பங்கீட்டு ஏற்பாட்டின்படி சாதாரண ஆண்டில் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டுக்கு 177.25 TMC நீர் கிடைக்க வேண்டும்.

எனவே தமிழ்நாடு எழுப்பும் அடிப்படையான கேள்வி:

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரை, தமிழக எல்லைக்கு முன்பாக மற்றொரு பெரிய அணையில் தேக்கி அதன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கர்நாடகத்துக்கு மேலும் அதிகரிக்குமா? என்பதே !

ஏற்கெனவே பல அணைகள் இருக்கின்றன

காவிரியின் மேல்பகுதியில் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன.

இவற்றுக்குக் கீழே, தமிழக எல்லையை அடைவதற்கு முன்பு மேக்கேதாட்டு போன்ற மற்றொரு பெரிய நீர்த்தேக்கம் உருவானால், காவிரி நீரைச் சேமித்து வெளியேற்றும் கர்நாடகத்தின் திறன் மேலும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டுக்கு நீரின் அளவு மட்டுமல்ல; காலமும் முக்கியம்

காவிரி டெல்டா விவசாயத்திற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கிடைக்கும் நீர் மிக முக்கியமானது.

ஜூன் மாதம் தேவைப்படும் நீர் செப்டம்பரில் கிடைத்தால், அதன் விவசாயப் பயன் ஒன்றாக இருக்காது.

எனவே மேல் பகுதியில் நீரைத் தேக்கக்கூடிய திறன் அதிகரிக்கும்போது, எவ்வளவு நீர் வருகிறது என்பதைப் போலவே எப்போது வருகிறது என்பதும் முக்கியமாகிறது.

குறிப்பாக வறட்சி ஆண்டுகளில் இந்தப் பிரச்சினை தீவிரமாகலாம்.

மேட்டூர் – டெல்டாவுக்கு என்ன பாதிப்பு?

கர்நாடகத்திலிருந்து பிலிகுண்டுலு வழியாக வரும் நீரே மேட்டூர் அணையின் முக்கிய நீராதாரம்.

அந்த நீரின் வருகை தாமதமானாலோ அல்லது குறைந்தாலோ,

மேட்டூர் அணை திறப்பு → குறுவை சாகுபடி → காவிரி டெல்டா பாசனம்

என்ற முழுச் சங்கிலியிலும் தாக்கம் ஏற்படலாம்.

அதனால்தான் மேக்கேதாட்டு விவகாரத்தை தமிழ்நாடு ஒரு தனி அணைப் பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை.

“உபரி நீரைத்தானே தேக்குகிறோம் ?”

கர்நாடகத் தரப்பில் முன்வைக்கப்படும் முக்கிய வாதங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் ஒரு நதியில் உபரி நீர் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரே அளவாக இருப்பதில்லை.

அதிக மழை பெய்யும் ஆண்டில் உபரியாகத் தோன்றும் நீர், வறட்சி ஆண்டில் கீழ்ப்பகுதி விவசாயத்திற்கும் குடிநீருக்கும் அவசியமானதாக இருக்கலாம்.

மேலும் கடலை நோக்கிச் செல்லும் ஆற்று நீர் அனைத்தும் வீணான நீர் அல்ல. டெல்டா, நிலத்தடி நீர் மற்றும் கழிமுகச் சூழலுக்கும் இயற்கையான ஆற்றோட்டம் தேவை.

அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரே வராதா?

இல்லை, அப்படிக் கூற முடியாது. ஆனால், கர்நாடகா திறந்து விடும் அளவைப் பொறுத்தே அது இருக்கும். மேலும், மழை கூடுதலாகப் பொழிந்து தேக்கி வைக்க முடியாத உபரி நீர் தமிழகத்துக்கு வரும்.

எனவே,

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரின் அளவையும், அது வரும் நேரத்தையும் மேல்பகுதியில் மேலும் கட்டுப்படுத்தக்கூடிய கட்டமைப்பு உருவாகிறதா? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. அதாவது Controlling capacity கர்நாடகாவுக்கு அதிகரிக்கிறது என்பதுதான் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியது.

அரசியலைத் தாண்டி பார்க்க வேண்டிய பிரச்சினை

கர்நாடகத்திற்கும் குடிநீர் தேவை; அதன் விவசாயிகளுக்கும் நீர் தேவை.

அதேபோல தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவுக்கும் அதன் சட்டப்பூர்வ நீர்ப்பங்கு சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும்.

எனவே மேக்கேதாட்டு குறித்து முடிவு செய்யும்போது,

+ எவ்வளவு நீர் தேக்கப்படும்?

+ எவ்வளவு பயன்படுத்தப்படும்?

+ தமிழ்நாட்டுக்குரிய நீர் எப்போது விடப்படும்?

+ வறட்சி ஆண்டுகளில் அணை எப்படி இயக்கப்படும்?

+ அதை யார் கண்காணிப்பார்கள்?

என்பதற்குத் தெளிவான பதில்கள் தேவை.

ஆனால் எல்லாவற்றையும் விட, காவிரி தொடர்பா விசயத்தில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றம், ஆணையம் உள்ளிட்ட சில தீர்ப்புகளை மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு வலுவாகவே இருக்கிறது.

எனவே, மேக்கேதாட்டு அணை குறித்தது சரியான தகவல்களை அது தருமா என்பதே கேள்விக்குறி.

எனவே

மேக்கேதாட்டு விவகாரத்தின் மையம் 67 TMC கொள்ளளவுள்ள இன்னொரு அணை என்பதில் மட்டும் இல்லை. காவிரியின் மேல்பகுதியில் நீரைச் சேமித்து, அதன் கீழ்நோக்கிய ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன் மேலும் அதிகரிப்பதே தமிழ்நாட்டின் அடிப்படையான கவலை.

எனவே மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் முழக்கங்களைவிட நீரியல் தரவுகள், காவிரி தீர்ப்புகள், மாதாந்திர நீர்ப் பங்கீடு, டெல்டா விவசாயத்தின் தேவை மற்றும் கீழ்நிலை நீர் உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட வேண்டும்.

காவிரியில் ஒரு புதிய அணை என்பது வெறும் கட்டுமானம் அல்ல; ஒரு நதியின் நீரை யார், எங்கே, எவ்வளவு காலம் கட்டுப்படுத்த முடியும் என்ற முக்கியமான நீர் உரிமைக் கேள்வியும் கூட.

தமிழ்நாடு தனது உரிமைப் பங்கு நீருக்கு ஒவ்வொரு முறையும் கர்நாடகாவிடம் கெஞ்சிக்கேட்டுக்கொண்டு இருக்க வேண்டிய நிலை இருத்தல் கூடாது என்பதுதான் தமித்தின் மிக முக்கியக் கவலை.

மேக்கேதாட்டு அணைக் கட்டுமானத்தை கர்நாடக அரசு கைவிடுவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்கிறார்கள் நடுநிலையான ஆய்வாளர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User